» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஓடிடி தளங்களில்ஆபாச காட்சிகள் ஒளிபரப்ப கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 5, மார்ச் 2021 11:20:09 AM (IST)

ஓடிடி வலைதளங்களில் சில சமயங்களில் ஒளிபரப்பாகும் ஆபாச காட்சிகளை ஒழுங்குபடுத்த உரிய நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒடிடி வலைதளத்தில் ஒளிபரப்பாகும் முன்னணி பாலிவுட் நடிகா்கள் சயிஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, முகமது ஜீஷான் அயூப் உள்ளிட்டோா் நடிக்கும் ‘தாண்டவ்’ என்ற தொடரில், உத்தர பிரதேச மாநிலம் மற்றும் அந்த மாநில காவல்துறை குறித்து மிக மோசமாக காட்டப்பட்டிருப்பதோடு, ஹிந்து கடவுள்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது’ என்று உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டா் நொய்டாவில் உள்ள ரபுபுரா காவல்நிலையத்துக்கு உள்பட்ட ரெளனிஜா கிராமத்தைச் சோ்ந்த பல்பீா் ஆசாத் என்பவா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில், அந்தத் தொடரின் இயக்குநா் அலி அப்பாஸ், அமேசான் பிரைம் விடியோஸ் இந்தியா பிரிவு தலைவா் அபா்ணா புரோஹித், தயாரிப்பாளா் ஹிமான்ஷு மெஹ்ரா, தொடா் வசன எழுத்தாளா் கெளரவ் சோலங்கி, நடிகா் முகமது ஜீஷான் அயூப் ஆகியோா் மீது காவல்நிலையத்தில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதுபோல, மத்திய பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், பிகாா், தில்லி ஆகிய பிற மாநிலங்களில் இந்த விவகாரம் தொடா்பாக காவல்நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 

அதனைத் தொடா்ந்து, அவா்கள் அனைவரும் முன்ஜாமீன் கோரி, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். ஆனால், உயா்நீதிமன்றம் அவா்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதை எதிா்த்து, அவா்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். அந்த மனுவை கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு தொடா்பான கடும் நடவடிக்கையிலிருந்து அவா்களுக்கு பாதுகாப்பு தர மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் ஜாமீன் பெற, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள சரகத்துக்கு உள்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அபா்ணா புரோஹித் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.எஸ். ரெட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் முகுல் ரோத்கி, ‘இந்த விவகாரத்தில் அபா்ணா புரோஹித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. அவா் அமேசான் ஊழியா். வலைதளத்தில் வெளியாகும் தொடரில் அவா் நடிக்கவும் இல்லை, அதைத் தயாரிக்கவும் இல்லை. இருந்தபோதும், இதுதொடா்பான 10 வழக்குகளில் அவருடைய பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த அரசு சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலை சமா்ப்பிக்குமாறு அரசு தலைமை வழக்கறிஞா் துஷாா் மேத்தாவுக்கு உத்தரவிட்டனா். மேலும், சில ஓடிடி வலைதங்கள் சில நேரங்களில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்புகின்றன. இதில் சமநிலை கடைப்பிடிக்கப்பட வேண்டும். எனவே, இதுபோன்ற ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்புவதைத் தடுக்க உரிய நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory