» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சசிகலாவை விடுதலை செய்வதில் சிறப்பு சலுகை எதுவும் கிடையாது: உள்துறை அமைச்சர் அதிரடி

வெள்ளி 20, நவம்பர் 2020 3:27:29 PM (IST)

"பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை விடுதலை செய்வதில் சிறப்பு சலுகை எதுவும் காட்டப்படாது" என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரையும் குற்றவாளிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்தார்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி, ஜெயலலிதா மறைந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து நீக்கிய உச்சநீதிமன்றம், மற்ற 3 பேருக்கும் குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல், பெங்களூர் நகரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக சசிகலா விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் இவரது விடுதலை அதிமுகவில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சசிகலாவின் சிறைவாசம் வரும் ஜனவரி மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நன்னடத்தை அடிப்படையில் மேலும் முன்கூட்டியே எப்போது வேண்டுமானாலும் அவர் விடுதலை செய்யக் கூடும் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தரப்பு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், பெங்களூரில் இன்று, பசவராஜ் பொம்மை அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி என்ன தீர்ப்பு வழங்கினாரோ, அது இறுதியானது. கர்நாடக சிறைத் துறைக்கு என்று சட்டதிட்டங்கள் உள்ளன. எனவே அந்த அடிப்படையில் மட்டும் தான் சசிகலா விடுதலை செய்யப்படுவார். சிறப்பு சலுகை எதுவும் காட்டப்படாது. இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

சிறைத்துறை விதிமுறைகள் மற்றும் தீர்ப்பு அடிப்படையில் பார்த்தால் ஜனவரி 27-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு சசிகலா விடுதலை ஆகும் நிலை இருக்கிறது. எனவே அவர் எப்போது வேண்டுமானாலும் விடுதலை ஆவார் என்று வெளியான தகவலை பொம்மை மறுத்துள்ளார் என்று தான் பார்க்க வேண்டியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory