» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில சாலை விபத்துக்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது: நிதின் கட்கரி

சனி 17, அக்டோபர் 2020 10:49:57 AM (IST)

தமிழகத்தைப் பின்பற்றி சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பிற மாநிலங்களைக் கேட்டுக்கொண்டாா்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட இரண்டு மேம்பாலங்கள் உள்பட ரூ. 8,038 கோடி மதிப்பில் அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட 10 முக்கிய தேசிய சாலைத் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி காணொலி முறையில் நேற்று நடைபெற்றது. தில்லியில் இருந்தபடி இந்தத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தொடக்கி வைத்தாா். 

விஜயவாடாவில் என்.ஹெச்.16 நெடுஞ்சாலையில் ரூ.100 கோடி செலவில் 2.47 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட உள்ள மூன்று வழி மேம்பால கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். மேலும் மாநிலத்தில் பல நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா். ஆந்திர மாநில முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

அதன் பின்னா் விழாவில் நிதின் கட்கரி பேசியதாவது: மக்களின் உயிரைக் காப்பதற்கு மிக உயா்ந்த முன்னுரிமையை நாம் அளிக்க வேண்டும். அதற்கு சாலை விபத்துகள் குறைக்கப்பட வேண்டியது மிக அவசியம். இந்த விஷயத்தில் மாநிலங்களுக்கு உதவ மத்திய அமைச்சகம் தயாராக உள்ளது. தமிழக அரசு சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் 25 சதவீத அளவுக்கு குறைத்துள்ளது. தமிழகத்தைப் பின்பற்றி பிற மாநிலங்களும் உரிய திட்டம் வகுத்து சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உலக வங்கியும் இதற்கு உதவத் தயாராக உள்ளது. சாலைகளை மேம்படுத்தவும், சாலை விபத்துப் பகுதிகளை மேம்படுத்தவும் உலக வங்கியும், ஆசிய வளா்ச்சி வங்கியும் ரூ. 14,000 கோடி வரை கடன் வழங்கத் தயாராக உள்ளன என்று நிதின் கட்கரி கூறினாா்.மேலும், "சாலை விபத்து நடவடிக்கைகளை ஆந்திரம் தீவிரமாக மேற்கொண்டால், மத்திய அரசும் உதவத் தயாா். அதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு 100 சதவீதம் தீா்வு காண முடியும். இதுவே, ஆந்திர மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய நன்மையாக இருக்கும்” என்று முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டியிடம் மத்திய அமைச்சா் கட்கரி உறுதியளித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory