» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்த வீரர்களுக்கு பணி: சிஐஎஸ்எப் டிஐஜி

புதன் 12, ஆகஸ்ட் 2020 11:52:05 AM (IST)

விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்த வீரர்களை அதிகளவில் பணியமர்த்த நடவடிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தொழில் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. அனில்பாண்டே தெரிவித்துள்ளார்.

தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையை முடித்து செல்லும்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கனிமொழியிடம் இந்தியில் கூறினார்.

ஆனால், கனிமொழி எம்.பி.யோ, "எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்கள்” என்றார். இதையடுத்து அந்த பெண் அதிகாரி ‘நீங்கள் இந்தியரா?’ என்று கனிமொழியிடம் கேட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கனிமொழி, "இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து முடிவு செய்யப்பட்டது என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இந்தி திணிப்பு” என்று கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், "உங்களுடைய விரும்பத்தகாத அனுபவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கொள்கை அல்ல” என்று பதிவு ஒன்றை வெளியிட்டனர்.

இந்த சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்களை மட்டுமே நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தொழிற்பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. அனில்பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும் விமான நிலையங்களில் மொழி சிக்கலை தவிர்ப்பதற்காக இனிமேல் பயணிகளுடன் நேரடி தொடர்பில் உள்ள பதவிகளில் இருப்பவர்கள், உள்ளூர் மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் என்று டி.ஐ.ஜி. அனில்பாண்டே தெரிவித்துள்ளார். மேலும் பயணிகளின் உணர்வுகளை மதித்து கண்ணியத்துடன் பாதுகாவலர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory