» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெருநகரங்கள், நகரங்களை 4 வாரங்களுக்கு மூட வேண்டும்: சிதம்பரம் வலியுறுத்தல்!!

வியாழன் 19, மார்ச் 2020 3:40:15 PM (IST)

கரோனா வைரஸ் இந்தியாவில் தொடர்ந்து பரவாமல் தடுக்க, நகரங்கள், பெருநகரங்களை உடனடியாக மூட வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

உலகத்தையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. கரோனா வைரஸ் உருவாகிய சீனாவில் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு கொடூரமாக இருக்கிறது. நாளுக்கு நாள் அங்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

உலக நாடுகளின் சூழலைப் பார்த்து இந்திய அரசும் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் என மக்கள் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி கரோனா வைரஸுக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளார்கள். 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கரோனா வைரஸுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகள் போதாது என்றும், இன்னும் தீவிரமான அதிரடியான நடவடிக்கைகள் அவசியம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரமும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

ப.சிதம்பரம் ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில், "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட தகவலின்படி கரோனா வைரஸின் மூன்றாவது படிநிலை சமூக ரீதியாகப் பரவும் சூழல் இப்போது இல்லை என்று தெரிவித்துள்ளது. அதற்கான உதிரி பரிசோதனையில் மூன்றாவது படிநிலை இல்லை எனத் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக மத்திய அரசு விழித்துக்கொண்டு, தற்காலிகமாக அனைத்து பெருநகரங்களையும், நகரங்களையும் 2-வது படிநிலைக்குள்ளாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மத்திய அரசு அறிவிக்கும் முன்பாக சில மாநிலங்கள் தாங்களாகவே தங்கள் மக்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகரங்களையும், நகரங்களையும் 2 அல்லது 4 வாரங்களுக்கு மூட வேண்டும். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 2 அல்லது 4 வாரங்களுக்கு அனைத்து நகரங்களையும், பெருநகரங்களையும் மூடுவதில் எந்தத் தயக்கமும் காட்டாதீர்கள். உடனடியாக மூடிவிடுங்கள் எனத் தெரிவித்துள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்" என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory