» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எஸ்.சி.,எஸ்.டி. பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவை கூட்டாத முதல்வர் மீது நடவடிக்கை: கனிமொழி

புதன் 18, மார்ச் 2020 5:17:09 PM (IST)

மாநில அளவில் பட்டியல் இனத்தோர், பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறைகளைத் தடுக்கும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் கூட்டவில்லை. இதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?” என்று திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.

மார்ச் 17 ஆம் தேதி மக்களவையில் ஒரு கேள்விக்கு மத்திய சமுகநீதி மற்றும் மறுவாழ்வுத் துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா அளித்த பதிலை ஒட்டி கனிமொழி எம்.பி. துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது கனிமொழி எம்.பி. பேசுகையில், பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறைகளைத் தடுப்பதற்காக மாநில அளவில் முதல்வர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு பல மாநிலங்களில் கூட்டப்படவில்லை என்பது வேதனையாகவும் வெட்க கரமாகவும் இருக்கிறது. 

அதிலும் தமிழ்நாடு சமூக நீதிக்கான பெருமை மிக்க மாநிலம். அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் முதல்வர் இந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை இதுவரை ஒரு முறை கூட கூட்டவில்லை என்பது வெட்கக் கேடானது. மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தில் இருந்து நான்கு முறை அறிவுறுத்தப்பட்டும் கூட முதல்வர் அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் மாநில முதல்வர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய அரசு?” என்று கேட்டார்.

இதற்கு மத்திய சமுகநீதி மற்றும் மறுவாழ்வுத் துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா அளித்த பதிலில், "கனிமொழி குறிப்பிட்டதுபோல, மாநில முதல்வர்கள் அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் கூட்டப்படவில்லை. ஆனால் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அடுத்து வரும் காலங்களில் மாவட்ட அளவுக்குக் கீழே உள்ள நிலைகளிலும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தற்போதுள்ள சட்டத்தில் இரண்டு முறை சீர்திருத்தங்களைச் செய்த பெருமை இந்த அரசுக்கு உண்டு. இந்த சட்டத்தை மேலும் வலிமையாக்கி தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களைச் செய்யும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது என்று ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory