» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: பிரதமர் மோடி

புதன் 18, மார்ச் 2020 8:21:18 AM (IST)

பா.ஜனதா எம்.பி.க்கள் அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா எம்.பி.க்கள் வாராந்திர கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது பற்றி எம்.பி.க்கள் வட்டாரத்தில் கூறியதாவது:- கரோனா வைரஸ் தொற்றுநோய் ஒழிக்கப்படும் வரை பா.ஜனதா எந்த அரசியல் நிகழ்ச்சிகளையோ, கட்சி நிகழ்ச்சிகளையோ நடத்தாது. எனவே எம்.பி.க்களும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்த்து, தங்கள் பகுதியில் இந்த நோயை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் எந்தவித கருத்துவேறுபாடுகளையும் வெளிப்படுத்தாமல் முழு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். இந்த தகவலை அனைவரும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். இந்த வைரசுக்கு எதிரான பணியில் விமான நிலையங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா வைரஸ் தாக்குதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களின் பங்கும் பாராட்டுக்குரியது.

ஊடகங்கள் மிகவும் பாராட்டத்தக்க பங்காற்றி வருவதால் ஊடக பிரதிநிதிகளை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உதவும்படி கேளுங்கள். உங்கள் தொகுதிகளுக்கு சென்று கரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக எம்.பி.க்கள் வட்டாரம் தெரிவித்தது. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் டுவிட்டரில், பிரதமர் மோடி எம்.பி.க் களுக்கு வழங்கிய அறிவுரை பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ஜெய்சங்கர், நிர்மலா சீதா ராமன், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory