» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்க முடியாது: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் ஆவேசம்!!

செவ்வாய் 17, மார்ச் 2020 3:48:55 PM (IST)

மக்களவையில் என்னைப் பேசவிடாமல் என்னுடைய உரிமைகளைப் பறிக்கலாம், ஆனால், தமிழக எம்.பிக்களை பேசவிடாமல், தமிழக மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது அரசு அலுவல் மொழி தொடர்பான கேள்விக்கு மத்திய இணையமைச்சர் நித்தியானந்த ராய் பதிலளித்தார். அப்போது அந்த பதில் தொடர்பாக துணைக் கேள்வி கேட்பதற்கு திமுக எம்பிக்கள் விரும்பினர். ஆனால், இதற்கு சபாநாயகர் அனுமதி தராமல் அடுத்த கேள்விக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். 

இதற்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி எழுந்திருத்து, தமிழ்நாடு மக்களின் உணர்வு சார்ந்த விஷயம் இது. எனவே, துணைக் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அதை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்கவில்லை. இதை கண்டித்து திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதன் பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மட்டும் இந்தியா தயாராக இருக்க வேண்டியது மட்டுமல்ல, அடுத்துவரும் பொருளாதார பேரழிவையும் எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அடுத்த 6 மாதங்கள் நமது நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய வேதனையை எதிர்கொள்ளப் போகிறார்கள். உலக நாடுகளின் பொருளாதார தர மதிப்பீடு செய்யும் நிறுவனங்களான மூடிஸ், எஸ் அன்ட் பி ஆகியவை என்ன மதிப்பீடு செய்யும், அதிபர் ட்ரம்ப் என்ன நினைப்பார், சொல்வார் என்றுதான் பிரதமர் மோடி கவலைப்படுகிறார்.

இதுபோன்ற போலியான கவலைகளில் இருந்து பிரதமர் மோடி முதலில் வெளிவர வேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்கள், மதிப்பீடு செய்கிறார்கள் என்று கவலைப்படுவதை விடுத்து, பொருளாதார வளர்ச்சிக்காக ஏதாவது செய்யவேண்டும். ஆனால், பிரதமர் மோடி தனது தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டால், பிரச்சினையை புரிந்து கொள்ளும் விருப்பம் இல்லை என்றுதான் அர்த்தம். பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை குறைவின் பலனை மத்திய அரசு மக்களுக்கு வழங்கிட வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவையில் தமிழ் மொழியில் துணைக் கேள்விகள் கேட்க முயன்றபோது அவர்களுக்கு அனுமதி வழங்காமல் சபாநாயகர் செயல்பட்டது தமிழக மக்களை அவமானப்படுத்தியது போன்றதாகும். இது தனிப்பட்ட மனிதரான எனக்கு மட்டும் நேர்ந்த பிரச்சினை அல்ல.தமிழக மக்களுக்கான பிரச்சினை, அவர்களின் மொழி சார்ந்த பிரச்சினை, அவர்களின் தாய்மொழியில் பேச அனுமதிக்கவில்லை. இது ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமானப்படுத்தியதாகும்.

தமிழக மக்கள் தங்களின் உரிமையைப் பாதுகாக்கவும், நம்பவும், பேசவும் உரிமை இருக்கிறது. என்னுடைய உரிமைகளை நீங்கள் பறிக்கலாம், ஆனால், தமிழக மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது, தமிழக எம்.பி.க்களை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். ஆனால், தமிழக எம்.பி.க்களை தமிழ் மொழியில் துணைக் கேள்விகளை கேட்க அனுமதிக்காமல் அவர்களின் உரிமைகளை சபாநாயகர் ஓம்.பிர்லா பறித்துவிட்டார். இந்த சபை அனைத்து மதங்களுக்கும், மொழிகளுக்கும், மாநிலங்களுக்கும் இடமளிக்கும் இடமாகும். இங்கு விவாதங்கள், ஆலோசனைகள் நடக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக விவாதங்கள் நடப்பதில்லை. கேள்வி கேட்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்


மக்கள் கருத்து

மக்கள்Mar 18, 2020 - 09:40:21 AM | Posted IP 162.1*****

ஆடு நனையுதே என்று ஓநாய் கவலை பட்டதாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory