» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாம் ஏன் கட்சியை மூடிவிட்டுச் செல்லக்கூடாது? ப.சிதம்பரத்துக்கு பிரணாப் மகள் சுளீர் கேள்வி

புதன் 12, பிப்ரவரி 2020 12:28:43 PM (IST)

"நமது தோல்வியைப் பற்றி கவலைப்படாமல், ஆம் ஆத்மியின் வெற்றியைக் கொண்டாடுவதா?" என ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிக்குக் கட்சி எல்லைகளை கடந்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால், முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் ட்வீட் சொந்த கட்சிக்குள்ளேயே கடும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மஹிளா காங்கிரஸின் முக்கியப் பொறுப்பாளருமான சர்மிஷ்டா முகர்ஜி தான் சிதம்பரத்துக்கு இத்தகையக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவைத் தோற்கடித்துள்ளனர். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

சிதம்பரத்தின் ட்வீட்டுக்கு இணையவாசிகள் தான் முதல் விமர்சகர்களாக இருந்தனர். டெல்லி தேர்தலில் ஒரே ஓரிடத்தைக்கூட பிடிக்காத நிலையில், காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டதற்காகவா இந்த நன்றி என இணையவெளியில் காங்கிரஸ் அனுதாபிகள் வெகுண்டெழுந்தனர். இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆனால், நீங்களோ ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

தங்களுக்கு தகுந்த மரியாதையை உரித்தாக்கி ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஒருவேளை பாஜகவை தோற்கடிக்க மாநிலக் கட்சிகளை அவுட்சோர்ஸிங் முறையில் நியமித்துள்ளதா? அப்படியில்லை என்றால் எதற்காக நம் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் ஆம் ஆத்மியைக் கொண்டாட வேண்டும்? ஒருவேளை என் கேள்விக்கு பதில் ஆம் என்றால் நாம் ஏன் கட்சியை மூடிவிட்டுச் செல்லக்கூடாது!" என்று பதிவிட்டுள்ளார். மூத்த உறுப்பினரின் ட்வீட்டுக்கு முக்கிய உறுப்பினர் ஒருவர் எதிர்வினையாற்றியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.


மக்கள் கருத்து

சேகர்Feb 12, 2020 - 01:03:34 PM | Posted IP 162.1*****

சிதம்பரம் ஒரு சாடிஸ்ட்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory