» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திமுக - காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பு இல்லை: டெல்லியில் கே.எஸ். அழகிரி பேட்டி

செவ்வாய் 14, ஜனவரி 2020 5:18:43 PM (IST)

திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள், பிரிய வாய்ப்பில்லை என சோனியா காந்தியை சந்தித்த பின் கே.எஸ். அழகிரி  தெரிவித்தார்.

திமுகவுடன் தமிழ்நாடு காங்கிரஸுக்கு ஏற்பட்ட மோதல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சோனியா காந்தியை சந்தித்து இன்று விளக்கம் அளித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தலைநகர் டில்லியில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான திமுக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தமிழக காங்கிரசுக்கும் - திமுகவுக்கும் இடையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மனக்கசப்பு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் வழங்குவதில் திமுக கட்சியினர் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். இதைத் தொடர்ந்துதான் சோனியாகாந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது என கூறப்பட்டது.  இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரிக்கு சோனியா காந்தி திடீர் அழைப்பு விடுத்து இருந்தார். இதைத் தொடர்ந்து டில்லியில் சோனியா காந்தியை அழகிரி இன்று சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து சோனியாவுடன் பேசப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிக்கை குறித்து சோனியா காந்தி எதுவும் கேட்கவில்லை.  அரசியலில் என்ன நடக்கும் என ஆரூடம் கூற முடியாது. ஒரு குடும்பத்தில் ஊடலும், கூடலும் இருக்கத்தான் செய்யும். திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள். இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு இல்லை என கே.எஸ். அழகிரி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory