» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

வெள்ளி 13, டிசம்பர் 2019 3:31:29 PM (IST)

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம், கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்கவில்லை.

ஆனாலும், சபரிமலையில் அமைதியை குலைக்கும் வகையில் விளம்பர நோக்கில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க போவதில்லை என்று கேரள அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற ஏராளமான பெண்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இந்நிலையில் மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த பெண் ஆர்வலர் திருப்தி தேசாய், பிந்து அம்மினி ஆகியோர் சபரிமலை செல்ல முயன்றனர் அவர்கள் மீது மிளகாய்  ஸ்பிரே அடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தாங்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய இருப்பதால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திருப்தி தேசாய் தரப்பினர் போலீசாரிடம் மனு அளித்தனர். 

ஆனால், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என பிந்து அம்மினி , ரெஹானா பாத்திமா ஆகியோர் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.நாங்கள் விரைவில் ஒரு பெரிய அரசியலமைப்பு பெஞ்சை உருவாக்குவோம். இது இந்த விவகாரம் தொடர்பாக மறு ஆய்வு மனுக்களை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம்கூறி உள்ளது.

சபரிமலையில் இறுதி தீர்ப்பு எதுவும் இல்லை, 7 பேர் அமர்வில் விசாரணை நிலுவையில் உள்ளது. நாங்கள் எந்த வன்முறையையும் விரும்பவில்லை. சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிட உத்தரவிட முடியாது. சபரிமலையில் ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு மட்டுமே தொடரும். நாட்டில் சில விவகாரங்கள் மிகவும் பூதாகரமாக்கப்படுகின்றன; சபரிமலை விவகாரமும் பூதாகரமாக்கப்படுகிறது என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறினார். இந்த வழக்கில் மேலும் விசாரணை வரும் வரை பிந்து அம்மினி மற்றும் ரெஹானா பாத்திமா ஆகிய இரு பெண்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory