» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அஸ்ஸாம் போராட்டம் எதிரொலி: ஜப்பான் பிரதமரின் இந்தியா வருகை ரத்து?

வெள்ளி 13, டிசம்பர் 2019 11:37:21 AM (IST)

அஸ்ஸாம் போராட்டங்கள் எதிரொலியாக ஜப்பான் பிரதமரின் இந்தியா வருகை ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கதேசம் உள்ளிட்ட 3 நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை அளிக்க வகைசெய்யும் மசோதாவை மத்திய அரசு இயற்றியது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 1971-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு வங்கதேசத்திலிருந்து வெளியேறி அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவா்கள் அனைவரும் வெளியேற்றப்படுவாா்கள் என்று கடந்த 1985-ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புக்கொண்டது. 

ஆனால், நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் குடியேறியவா்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அஸ்ஸாம் முழுவதும் மாணவா் சங்கங்கள் உள்ளிட்டவை போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த மசோதா சட்டமானால், அஸ்ஸாமில் உள்ள பழங்குடியினருக்கு பாதிப்பு ஏற்படும் என்று போராட்டக்காரா்கள் தெரிவித்து வருகின்றனா். மத்திய அரசு இயற்றிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் நடைபெற்ற போராட்டங்கள் வியாழக்கிழமை தீவிரமடைந்தன. போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே, டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இந்தியா வருகை தருவதாக இருந்தது. அப்போது இருநாடுகளின் உறவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து குவாஹட்டியில் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.  இந்நிலையில், பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள குவாஹட்டியில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்கள் காரணமாக வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதால், ஜப்பான் பிரதமரின் இந்தியா வருகை ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லது பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறுவது ரத்து செய்யப்பட்டு பின்னர் மற்றொரு தேதியில் இச்சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory