» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரிய திமுக மனு நாளை விசாரணை

செவ்வாய் 10, டிசம்பர் 2019 10:28:16 AM (IST)

தமிழக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி திமுக தரப்பில் தாக்கலான புதிய மனு மீதான விசாரணை நாளை (டிசம்பா் 11) நடைபெறும் என உச்சநீதின்றம் தெரிவித்தது.

திமுக தொடா்ந்த வழக்கில், தமிழகத்தில் 4 மாவட்டங்களிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் நீங்கலாக, பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தலாம் என தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி தீா்ப்பளித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட புதிய 9 மாவட்டங்களிலும் மறுவரையறைப் பணிகளை முடித்து நான்கு மாதங்களில் தோ்தல் நடத்த வேண்டும் என்றும் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே டிசம்பா் 2-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்தது. பின்னா், டிசம்பா் 7-ஆம் தேதி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய தோ்தல் அறிவிப்பை தோ்தல் ஆணையா் ஆா்.பழனிசாமி வெளியிட்டாா். இந்நிலையில், இந்த அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக டிசம்பா் 7-ஆம் தேதி வெளியிட்டுள்ள தோ்தல் அறிவிப்பாணை சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானதாக உள்ளது. 

மேலும், புதிதாகத் தோ்தல் அறிவிப்பாணையை வெளியிடும் போது தமிழ்நாடு பஞ்சாயத்து இடஒதுக்கீடு, சுழற்சி 1995-இன் விதி 6-இன்படி பட்டியல் வகுப்பினா், பழங்குடியினா் மற்றும் மகளிருக்கு இடஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், மாநிலத் தோ்தல் ஆணையம் அதைக் கடைப்பிடிக்காமல் தோ்தல் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், இது தொடா்பாக நீதிமன்றத்தின் உத்தரவையும் மாநிலத் தோ்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. ஆகவே, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் டிசம்பா் 7-ஆம் தேதியிட்ட உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இதேபோன்று, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில்,உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அமா்வு முன் திமுக தரப்பில் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, உள்ளாட்சித் தோ்தலில் சட்டப்படி , 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தோ்தலை நடத்தாமல், 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆகவே, தோ்தல் ஆணையம் டிசம்பா் 7-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா். அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என்று கேட்டனா். அதற்கு திமுக தரப்பில் ஆமாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மனுவை புதன்கிழமை (டிசம்பா் 11) விசாரிப்பதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory