» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜ வெற்றிமுகம்: எடியூரப்பா அரசு தப்பியது

திங்கள் 9, டிசம்பர் 2019 4:26:47 PM (IST)

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் பாஜ 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் இரு தொகுதிகளிலும், சுயேச்சை ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளனர். இதனால், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசு ஆபத்திலிருந்து தப்பியது.

கர்நாடகாவில் 2018ம் ஆண்டு சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மஜத, பாஜ, காங்கிரஸ் ஆகிய எந்தக்கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் மஜதவை சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார். 14 மாதங்கள் இந்த கூட்டணி அரசு நீடித்தது. இதன் பின்னர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறி தங்களின் எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. மாறாக 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார். மேலும், இந்த 17 பேரும் இப்போதுள்ள சட்டப்பேரவை காலம் முடியும்வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவித்தார். ரமேஷ்குமாரின் உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் 17 பேரில், 15 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 ெதாகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 5ம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

முதல்வர் எடியூரப்பா ஆட்சிக்கு சோதனை தரக்கூடிய தேர்தலாகவே இது அமைந்தது. எடியூரப்பாவின் ஆட்சி தப்புமா அல்லது வீழ்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஒரு வேளை பாஜ வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை என்றால், மஜத-காங்கிரஸ் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்தன. ஆனால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் எடியூரப்பா தனது காலில் சக்கரம் கட்டிக்கொண்டு 15 தொகுதிகளிலும் அதிரடி சுற்றுப்பயணம் மேற்ெகாண்டு பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்கும் தேர்தலாகவே இந்த இடைத்தேர்தல் கருதப்பட்டது.

இவரும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது. ஆரம்பம் முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜ வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டதில், பாஜ 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர் இரு தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தனர். ஒசக்கோட்டையில் பாஜ வேட்பாளருக்கு போட்டியாக, அதாவது இத்தொகுதியின் பாஜ எம்.பி. பச்சேகவுடாவின் மகன் சரத் பச்சேகவுடாவுக்கு பாஜவில் டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் ஆதங்கத்தில் இருந்த சரத் பச்சேகவுடா சுயேட்சையாக போட்டியிட்டார். இத்தொகுதியில் சரத் பச்சேகவுடா ெவற்றி பெற்றார்.

அதேபோல, 9 தொகுதிகளில் பாஜ வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். கே.ஆர்.பேட்டை தொகுதியில் பாஜ வேட்பாளர் கே.சி.நாராயணகவுடா,. மகாலட்சுமி லே அவுட் பாஜ வேட்பாளர் வி.கோபாலய்யா, சிக்கபல்லாபூர் தொகுதி பாஜ வேட்பாளர் டாக்டர் கே.சுதாகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையுடன் தொடர 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், தற்போது பாஜ வேட்பாளர்கள் 12 தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும் நிலையில் உள்ளதால், முதல்வர் எடியூரப்பாவின் அரசு ஆபத்தில் இருந்து தப்பியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory