» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திரா காந்தியின் 102வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, சோனியா, ராகுல் மரியாதை

செவ்வாய் 19, நவம்பர் 2019 5:14:49 PM (IST)மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி  உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

கடந்த 1917 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி, நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவுக்கும் - கமலா நேருவுக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் அலகாபாத்தில் இந்திரா காந்தி பிறந்தார். நாட்டின் முதல் பெண் பிரதமர் என்னும் பெருமையை பெற்ற இவர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும், தகவல் தொலை தொடர்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1984 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த போது இந்திரா காந்தி, அவரது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்

இந்நிலையில், இன்று இந்திரா காந்தியின் 102வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, டில்லியில் உள்ள அவரது நினைவிடமான சக்தி ஸ்தலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் நாடு முழுவதிலும் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் மரியாதை

நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு அனைத்து கட்சித் தலைவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில், சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆஸாத், ஆனந்த் சர்மா, திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி மரியாதை

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்,”இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்தியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி டுவிட்டரில்,”வலுவான தலைமைத்துவத்துக்கு தேவையான திறன்களையும், வலிமையான நாட்டை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றிய இரும்புப் பெண்மணி. என் அன்பிற்குரிய பாட்டியின் பிறந்தநாளான இன்று, அவருக்கு என் மரியாதையை செலுத்துகிறேன்” என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory