» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத் துரோக வழக்கு ரத்து: பீகார் போலீஸ் நடவடிக்கை

வியாழன் 10, அக்டோபர் 2019 11:10:16 AM (IST)

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால் இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கை பீகார் போலீசார் ரத்து செய்து விட்டனர்.

இந்தியாவில் ஆங்காங்கே சிலர் கும்பலாக சென்று வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதை கண்டித்தும், இதில் தலையிட்டு கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த கோரியும் பிரதமர் மோடிக்கு, கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் கடிதம் எழுதி இருந்தனர்.

இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வக்கீல் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டை அவமானப்படுத்துவது போன்றும், மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவது போன்றும் இருப்பதால் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சூர்ய காந்த் திவாரி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு ஆகஸ்டு 20-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அங்குள்ள சதார் போலீஸ் நிலையத்தில் கடந்த 4-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பீகார் போலீசாரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு மு.க.ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள். இந்த நிலையில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர். இதுபற்றி முசாபர்பூர் சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் கூறுகையில், 49 பேர் மீது கூறப்பட்ட புகார்கள் விஷமத்தனமானவை என்றும், அவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்து இருப்பதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory