» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கெடு விதிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி மனு

சனி 20, ஜூலை 2019 11:10:06 AM (IST)

கர்நாடக சட்டப்பேரவை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கெடு விதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி மனுதாக்கல் செய்துள்ளார்.   

கர்நாடக சட்டப்பேரவையில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கான தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம் நேற்று இரவு வரை நீடித்தது. அவையை ஒத்திவைக்கக் கோரி மஜத-காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், வரும் 22-ம் தேதிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமையே நடத்த வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா இரு முறை பிறப்பித்த உத்தரவை அவை புறக்கணித்து விட்டது. 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காலம் கடத்தவில்லை என்று பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார். பேரவைக் கூட்டம் தொடங்கியதும், இது தொடர்பாக அவர் கூறியதாவது: முதல்வர் குமாரசாமி கொண்டு வந்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு நான் காலம் தாழ்த்துவதாக சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. நான் ஒருசார்பாக நடந்து கொள்ள விரும்பவில்லை. காலம் தாழ்த்துவதாகக் கூறுவது எனக்கு வருத்தமளிக்கிறது. 

ஒருநாள் கடத்தினால் ரூ.12 கோடி பணம் கிடைப்பதாக என்மீது குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினால், அதற்கு தகுந்த பதிலடி தர வேண்டியிருக்கும். இங்கு அமர்ந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை வழங்குவதற்காக வந்திருக்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பை காலம் தாழ்த்துவதாக ஒருசிலருக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால், பொது வாழ்க்கையை நேர்மையுடன் நடத்தி வந்திருக்கிறேன். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது எளிது. என்னை விமர்சிப்பதற்கு முன்னால் யோசித்துப் பேசுங்கள் என்றார்.

உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி மனு

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கெடு விதிக்க முடியாது எனக் கூறி, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் அவர் கூறியிருப்பதாவது: பேரவையில் விவாதம் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், அவை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஆளுநரால் உத்தரவிட முடியாது. ஆளுருக்கு உரிய அதிகாரங்களை இந்த நீதிமன்றம் ஏற்கெனவே வரையறுத்துவிட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேச மாநில விவகாரத்தை விசாரித்த இந்த நீதிமன்றம், பேரவைத் தலைவரின் செயல்பாடுகளில் தலையிடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்து விட்டது. 

எனவே, ஆளுநர் வஜுபாய் வாலா பிறப்பிக்கும் உத்தரவுகள், ஆளுநருக்குரிய அதிகாரங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளன. அதுமட்டுமன்றி, அரசமைப்புச் சட்டப்படி, ஒரு அரசியல் கட்சி தனது எம்எல்ஏகளுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. ஆனால், பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது என்று இந்த நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை, நீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குமாரசாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory