» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் நாட்டையே விற்றுவிடுவார் : காங்கிரஸ் தலைவர் தாக்கு

வெள்ளி 12, ஜூலை 2019 11:13:14 AM (IST)

லாபம் சம்பாதிக்கிற ரயில்வே தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து இலக்குகளை அடைய முடியாமல் தோல்வியை சந்தித்து வருகிறது. 

வரும் ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு ரூ.50 லட்சம் கோடி செலவிடப்படும் என்று பட்ஜெட் சொல்கிறது. பியூஸ் கோயலுக்கு முன்பாக சுரேஷ் பிரபு ரயில்வே மந்திரியாக இருந்தபோது, ரூ.8½ லட்சம் கோடி செலவிடப்படும் என கூறினாரே? சுரேஷ் பிரபு சொன்னது என்ன ஆனது?இப்போது நீங்கள் கூடுதலாக ரூ.50 லட்சம் கோடி சேர்த்து இருக்கிறீர்களே? ரயில்வே சொத்துக்களை விற்பதுதான் உங்கள் நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது.

சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க விரும்புகிறார். ரயில்வே மந்திரி ரயில்வே சொத்துக்களை விற்க விரும்புகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் நாட்டையே விற்றுவிடுவார். ரயில்வேயில் நீங்கள் முதலீடுகள் செய்யப்போவதாக சொல்வது, படுப்பதற்கு பாய்கூட இல்லாத நிலையில் தூங்குவதற்கு கூடாரத்தை தேடுவது போல அல்லவா இருக்கிறது?

ரயில்வேயின் செயல்பாட்டு விகிதாச்சாரம் 2017-18-ல் 98.4 சதவீதம். இது அரசின் மதிப்பீட்டை விட அதிகம் ஆகும். வருவாய் மற்றும் செலவுகள் அதிகாரப்பூர்வ தகவல்களை விட குறைவாக உள்ளது. ஆனால் நீங்கள் கனவுகளை விற்பனை செய்வதை மட்டும் நிறுத்தவில்லை. தனியார் மற்றும் வெளிநாட்டினரின் கூட்டு திட்டங்களை பொறுத்தமட்டில், அரசு ஏற்கனவே கூறியது போன்று பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. அதெல்லாம் அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களாகவே உள்ளன.

(காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் அமைந்துள்ள) ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலை போன்ற லாபம் சம்பாதிக்கிற தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க அரசு முயற்சிப்பது ஏன்? ரயில்வே என்பது சமூக உறுதிப்பாடு. அது வெறும் வணிக ரீதியிலான அமைப்பு மட்டுமல்ல.

காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை என்று சொன்னால், அரசு புல்லட் ரயில்கள் திட்டத்தை எப்படி பார்க்க முடியும்? அரசு தனது நோக்கங் களை, கொள்கைகளை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது துணை கேள்விகளுக்கு சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்தார். அப்போது அவர், "ஏர் இந்தியா மிகச்சிறப்பாக செயல்படுகிறது. இருந்தாலும்கூட அதன் கடன் சுமையை தாங்க முடியாது” என கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, "ஏர் இந்தியா மிகச்சிறப்பாக செயல்படுகிறது என்கிறபோது, அதன் பங்குகளை அரசு ஏன் விற்கிறது?” என மடக்கினார். அதற்கு மந்திரி ஹர்தீப் சிங் பூரி, " அந்த நிறுவனத்தின் கடன் சுமையால்தான், அதன் பங்குகளை விற்க முயற்சிக்கிறோம்” என கூறினார். மேலும், "இதற்கு முன்பாக ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. அரசு இப்போது பாடம் கற்றுக்கொண்டு விட்டது. இந்த முறை, அரசு மேற்கொண்டுள்ள செயல்முறை, இந்த நடவடிக்கையை உறுதி செய்யும்” என கூறினார். என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory