» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழக, ஆந்திர நலனுக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும்: திருப்பதியில் பிரதமர் மோடி உரை

ஞாயிறு 9, ஜூன் 2019 10:19:37 PM (IST)வெற்றி, தோல்வி முக்கியமில்லை, தமிழக, ஆந்திர நலனுக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும் என திருப்பதியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி திருப்பதிக்கு இன்றுமாலை வந்தடைந்தார். ரேணிகுண்டா விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து திருமலைக்கு பயணித்து ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். பிரதமர் மோடியுடன், ஆந்திர ஆளுநர் இ.எஸ். எல். நரசிம்மன், முதல்வர் ஒய். எஸ். ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரும் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்கள். பின்னர் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இலங்கைப் பயணத்தில் எனக்கு கூடுதல் நேரம் செலவானதால் இங்கு வர தாமதமானது. அதற்காக நான் முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வார். மத்திய அரசு எப்போதும் ஆந்திர அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். ஏழுமலையான் அருளைப் பெற கடந்த காலங்களில் பலமுறை திருப்பதியில் தரிசித்துள்ளேன். இப்போது 130 கோடி மக்களும் வளம் பெற வேண்டிக்கொண்டேன்.  ஆந்திராவிலும், தமிழகத்திலும் மக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை முறையாக செய்துள்ளனர். 

பாஜக இங்கு வெற்றிபெற்றதா, தோல்வியுற்றதா என்பது முக்கியமில்லை. மக்களுக்கு எப்போதும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம். ஜனநாயகத்தை காப்பாற்றிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் உட்பட பாஜகவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மக்களின் சேவகன் தான். பாஜக என்றைக்குமே தேர்தலுக்கான கட்சி கிடையாது. ஆந்திர மற்றும் தமிழகத்தின் நலனுக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும். நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக மட்டுமே பாஜக பாடுபடுகிறது. அதனால் தான் மக்களுக்கும் பாஜகவை இரண்டாவது முறையாக தொடர்ந்து தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory