» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வித்யாசாகர் சிலையை மீண்டும் நிறுவ பாஜகவின் பணம் தேவையில்லை: மோடிக்கு மம்தா பதில்

வியாழன் 16, மே 2019 5:48:33 PM (IST)

கொல்கத்தாவில் வித்யாசாகருக்கு சிலையை மீண்டும் நிறுவ பாஜகவின் பணம் எங்களுக்கு தேவையில்லை என பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி கொடுத்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நடத்திய தேர்தல் பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நடந்த கலவரத்தில் கல்லூரி வளாகத்தில் இருந்த வித்யாசாகரின் சிலை சூறையாடப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஒருநாள் முன்னதாகவே அங்கு பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி நேற்று வித்யாசாகர் ராவ் சிலை உடைப்பு காட்சி அடங்கிய வீடியோவை  வெளியிட்டார். அதில், பாஜக தொண்டர்கள் அந்த சிலையை சுக்குநூறாக உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. சட்டர்ஜி கூறும்போது, இதுதான் பாஜகவின் கலாசாரம். அமித் ஷாவும், அவரது கட்சியினரும் சிலை உடைப்பு வி‌ஷயத்தில் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று கூறினார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”வித்யாசாகரின் சிலை அதே இடத்தில் மீண்டும் நிறுவப்படும்” என்று உறுதியளித்தார். 

இந்நிலையில், மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று மந்திர்பஜாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,”கொல்கத்தாவில் வித்யாசாகரின் சிலையை மீண்டும் நிறுவப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்துள்ளார். எதற்கு பாஜகவின் பணத்தை நாம் வாங்கவேண்டும். மேற்கு வங்க மாநிலத்திடம் தேவையான அனைத்து வளங்களும் உள்ளன” என்று கூறினார்.

மேலும்,”சிலைகளை சூறையாடுவதே, பாஜகவின் செயல்களில் ஒன்று. திரிபுராவில் சிலைகளை அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்” என்று குற்றஞ்சாட்டினார். ”மேற்கு வங்க மாநிலத்தின் 200 வருட கால பாரம்பரியத்தை பாஜக அழித்துவிட்டது. பாஜகவை ஆதரிப்பவர்களை சமூகம் ஒருபோதும் ஏற்காது” என்று கூறினார். ”சமூக வலைதளங்களில் போலியான பதிவுகளை வெளியிட்டு, மக்களை தூண்டி கலவரத்திற்கு வழிவகுக்கின்றனர்” என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக தன் அரசுக்கும், மேற்கு வங்க மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த எதிர்க்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி தன் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். மம்தா பானர்ஜி டுவிட்டரில், ”மாயாவதி, அகிலேஷ் யாதவ், காங்கிரஸ், சந்திரபாபு நாயுடு என அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் எடுக்கும் ஒருதலைபட்சமான நடவடிக்கை, ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் நேரடி தாக்குதலாகும். மக்கள், இதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory