» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்!!

செவ்வாய் 30, ஏப்ரல் 2019 4:29:42 PM (IST)

பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக பேசிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில்  ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார்..

ரஃபேல் ஊழல் வழக்கு விசாரணையின் போது பிரதமர் மோடியை நீதிமன்றமே திருடன் என்று கூறிவிட்டதாக ராகுல் பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்தி தரப்பில் வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம்  தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  இன்று விசாரணைக்கு வந்தபோது, மோடியை திருடன் என்று கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்காமல், வருத்தம் தெரிவித்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். ராகுல் காந்தி மன்னிப்புக் கோரியது தொடர்பாக மே 6ம்  தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 28 பக்கங்கள் கொண்ட விரிவான பிரமாணப் பத்திரத்தை, ராகுல் காந்தி தனது வழக்குரைஞர் சுனில் ஃபெர்ணான்டஸ் மூலம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதில் அவர் கூறியிருந்ததாவது, தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காரணத்தினால், நான் அவ்வாறு கூறிவிட்டேன். அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். ஆனால், அதை வேண்டுமென்றே நான் கூறியதுபோல, எனது அரசியல் எதிரிகள் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். ரஃபேல் விவகாரத்தில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வைத்து, இதில் ஊழல் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பரப்பி வந்த தவறான கருத்துகளை எதிர்கொள்வதற்காகவும், அரசை எதிர்க்கவுமே நான் அந்தக் கருத்தைத் தெரிவித்தேன்.

அவமதிக்கும் நோக்கமில்லை: உச்சநீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கிலோ அல்லது அரசியல் தளத்துக்குள் உச்சநீதிமன்றத்தை இழுக்க வேண்டும் என்ற நோக்கிலோ நான் அவ்வாறு கூறவில்லை. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று கூறி, மத்திய அரசின் வாதங்களைக் கடந்த 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இது பொதுவாக ஆளும் கட்சிக்கு எதிரான தீர்ப்பாகவே கருதப்படும். எனவேதான் அவ்வாறு கூறினேன். உச்சநீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.

தீர்ப்பைப் படிக்கவில்லை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீற வேண்டும் என்றோ, நீதித்துறையை எதிர்க்க வேண்டும் என்றோ, நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்றோ, நீதிமன்றத்தின் மீது பழிசுமத்தும் நோக்கிலோ நான் அவ்வாறான கருத்தைத் தெரிவிக்கவில்லை. நான் அக்கருத்தைக் கூறியபோது, தீர்ப்பின் முழு விவரம் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. அதனால், நான் முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. 

தீர்ப்பைப் படிக்காமலேயே நான் அந்தக் கருத்தைத் தெரிவித்தேன். இந்த விவகாரத்தில் மனுதாக்கல் செய்துள்ளவர் (மீனாட்சி லேகி) தனது சுயநலத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவுமே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இது நீதிமன்ற நடைமுறையை துஷ்பிரயோகம் செய்வதுபோல் உள்ளது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரமாணப் பத்திரத்தில் ராகுல் கூறியிருந்தார். இந்த நிலையில் மே 6ம் தேதிக்குள் மன்னிப்புக் கேட்டு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory