» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களவை 4-ஆம் கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு : பிரபலங்கள் வாக்களிப்பு

செவ்வாய் 30, ஏப்ரல் 2019 10:56:04 AM (IST)மக்களவைக்கு 4-ஆவது கட்டமாக, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 64 சதவீத வாக்குகள் பதிவாகின.

மேற்கு வங்கத்தில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. பாரபானி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில், மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான பாபுல் சுப்ரியோவின் காரை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிஸா, பிகார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

இதுதவிர ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் இரண்டாவது கட்டமாக குல்காம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொகுதியில் மட்டும் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. நான்காவது கட்ட தேர்தலில் மொத்தம் 64% வாக்குகள் பதிவானதாகவும், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 76.47% வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் 62%, உத்தரப் பிரதேசம் 53.12%, மத்தியப் பிரதேசம் 65.86%, மகாராஷ்டிரம் 52%, ஒடிஸா 64.05%, பிகார் 53.67%, ஜார்க்கண்டில் 63.42% வாக்குகள் பதிவாகின. குல்காமில் வெறும் 10.3 சதவீத வாக்குகளே பதிவாகின.

முக்கிய வேட்பாளர்கள்: 

இத்தேர்தலில் வாக்களிக்க சுமார் 12.79 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 961. இதில் மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், சுபாஷ் பாம்ரி, எஸ்.எஸ். அலுவாலியா, பாபுல் சுப்ரியோ, கஜேந்திர சிங் ஷெகாவத், பாஜக மூத்த தலைவர் வைஜயந்த் பாண்டா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், ஆதிர் ரஞ்சன் சௌதரி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நடிகை ஊர்மிளா, மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் கன்னையா குமார், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சதாப்தி ராய் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

பிரபலங்கள் வாக்களிப்பு

மகாராஷ்டிரத்தில் 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மும்பையில் உள்ள 6 தொகுதிகளும் அடங்கும். மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, பாஜக எம்.பி. பூனம் மகாஜன், மும்பை வடக்கு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் நடிகையுமான ஊர்மிளா, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் வாக்களித்தனர். 

மேலும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யாவுடன் வந்து வாக்களித்தார். நடிகர்கள் ஷாரூக் கான், சல்மான்கான், ஆமிர் கான், ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், சஞ்சய் தத், நடிகைகள் ரேகா, மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோன், கங்கனா ரணாவத் உள்ளிட்டோரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory