» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜெ. மரணம் குறித்த விசாரணை ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 26, ஏப்ரல் 2019 12:05:33 PM (IST)

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.

அப்பல்லோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆணையத்தில் 21 மருத்துவர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து விசாரணை நடத்தவும், பல்வேறு தகவல்களை மருத்துவர்கள் விசாரணை ஆணையத்திடம் அளித்த பிறகும், மீண்டும் மீண்டும் மருத்துவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவதாகவும் அப்பல்லோ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இது குறித்து தமிழக அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதுவரை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க,  உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, இந்த விசாரணை ஆணையம் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கவும், விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி  உத்தரவு பிறப்பித்தது.  அதில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்குவதற்காக,  சிகிச்சை குறித்து விசாரணை ஆணையம் எழுப்பும்  கேள்விகளை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தவறு எனக் கூறுவதை ஏற்க முடியாது. 

அதே நேரத்தில் ஆணையத்தின் நடவடிக்கைகள் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு இடம் அளிக்காத வகையில் ஆணையம் செயல்பட்டிருக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் ஆணையத்துக்கு மருத்துவ தொழில்நுட்ப ரீதியாக உதவ, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து 5 அரசு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு,  இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஆணையத்தின்  தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனை தரப்பின்  கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. 

ஏறத்தாழ 90 சதவீத விசாரணை முடிவடைந்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நேரத்தில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது. அப்படி தடை விதித்தால், அது இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைத்துவிடும்  என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வழக்குரைஞர் ரோஹிணி மூஸா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory