» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பலாத்கார வழக்கில் ஜாமீனில் வந்த மஞ்சு வர்மா மத்திய அமைச்சர் கூட்டத்தில் பங்கேற்றதால் சர்ச்சை

ஞாயிறு 31, மார்ச் 2019 10:13:54 AM (IST)

பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மா மத்திய அமைச்சரின் மேடை பிரசாரத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரில், மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வரும் காப்பகம் உள்ளது. அதில், மும்பை அமைப்பு நடத்திய ஆய்வில், 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தொண்டு நிறுவன அதிபர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மா பதவி விலகினார். மாநில அரசு, இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது. வழக்கு விசாரணையில் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம் தொடர்பான தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி சி.பி.ஐ. தாக்கல் செய்த 73 பக்க குற்றப்பத்திரிக்கையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பிராஜேஷ் தாகூர், சிறுமிகளை சிறிய ஆடையுடன் ஆபாச நடனம் ஆட செய்துள்ளான், காப்பகத்திற்கு வந்தவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ஆபாச நடனம் ஆட மறுக்கும் சிறுமிகளுக்கு இரவு ஒரு ரொட்டியும், உப்பும் மட்டும் உணவாக கொடுக்கப்படும். சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு நல்ல உணவு கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வளவு கொடுமைகள் அங்கு அரங்கேறியும் அதிகாரிகள் அனைத்தையும் தெரிந்து அமைதி காத்துள்ளனர். தாகூரை சந்திக்க விருந்தினராக வரும் நபர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தாகூர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என்றும் பாதிக்கப்பட்ட 33 சிறுமிகள் உள்பட 101 பேர் சாட்சிகள் எனவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் பீகார் அரசு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  இப்போது வழக்கு தொடர்பான விசாரணையை பீகாரில் இருந்து டெல்லிக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை 6 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றச்சாட்டு எழுந்தவுடன் தனது அமைச்சர் பதவியில் இருந்து மஞ்சு வர்மா விலகினார்.  இந்த வழக்கில் ஆயுத தடை சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.  இதன்பின் ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.  இந்நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் கிரிராஜ் சிங் பெகுசராய் நகரில் நேற்று கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் பீகார் அமைச்சரான மஞ்சு வர்மா மேடையில் மற்ற தலைவர்களுடன் ஒன்றாக அமர்ந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory