» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிதி ஆயோக் அமைப்புக்குப் பதிலாக, திட்டக் குழு கொண்டு வரப்படும் : ராகுல் உறுதி!

சனி 30, மார்ச் 2019 4:36:34 PM (IST)

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் அமைப்புக்குப் பதிலாக, திட்டக் குழு கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

மத்திய அரசின் ஆலோசனை அமைப்பாகச் செயல்பட்டு வந்த திட்டக் குழு நரேந்திர மோடி பிரதமரான பிறகு 2015ஆம் ஆண்டில் நிதி ஆயோக் அமைப்பாக மாற்றப்பட்டது. நிதி ஆயோக் அமைப்பானது ஆலோசனை அமைப்பு என்ற வரம்பை மீறி, மத்திய அரசின் பிரச்சார அமைப்பாகச் செயல்படுவதாக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளை வெளியிடுவதிலும் நிதி ஆயோக் தலையிட்டதாகப் புள்ளியியல் துறையின் செயல் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற மோகனன் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது நிதி ஆயோக் அமைப்பின் மீது விமர்சனங்களை மேலும் அதிகரிக்கச் செய்தது. திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நிதி ஆயோக் அமைப்பை நீக்கிட மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளன. இந்நிலையில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி நிதி ஆயோக் அமைப்பு மாற்றப்படும் என்று உறுதியளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் விமர்சனம் செய்ததற்காக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மார்ச் 29ஆம் தேதி தனது ட்விட்டர் பதிவில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக்கை நீக்குவோம். பிரதமருக்கும், தவறான தரவுகளுக்கும் மார்க்கெட்டிங் செய்வதைத் தவிர நிதி ஆயோக்கின் பணி வேறு எதுவும் இல்லை. 100 உறுப்பினர்களுக்கும் குறைவாக உள்ள புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட திட்டக் குழுவாக நிதிக் குழுவை நாங்கள் மாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பையடுத்து, திட்டக்குழுவின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் வி.கே.சிங் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். ”உங்கள் கட்சி 60 ஆண்டுகளாக இந்த நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. உங்கள் குடும்ப ஆட்சி முறையில் உருவான திட்டக் குழுவால் எதுவுமே நடக்கவில்லை. நிறுவனங்களை உடைப்பது அல்லது ஒழுங்குமுறைகளைச் சிதைப்பது பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, இந்த நாட்டிற்கு நீங்கள் எந்த வகையில் பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்” என்று ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஆப்Mar 31, 2019 - 01:25:26 PM | Posted IP 162.1*****

அறுபது வருஷம் என்ன செய்தாங்கனு இருபத்தாய்ந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து எங்களுக்கு நன்றாகவே தெரியும்.கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன கிழித்தீர்கள் என்றால் அதற்கு பதில் சொல்ல மாட்டேங்குறீர்கள்.

சாமிMar 30, 2019 - 09:31:51 PM | Posted IP 172.6*****

சரி தம்பி அப்புறம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory