» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மிஷன் சக்தி குறித்து பிரதமர் பேசியதில் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

சனி 30, மார்ச் 2019 4:34:17 PM (IST)

மிஷன் சக்தி குறித்து பிரதமர் பேசியதில் விதிமீறல் இல்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விண்வெளியில் செயற்கைக் கோளைப் பாதுகாக்கும் நோக்கில் மற்ற செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணையைப் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறை (டிஆர்டிஓ) வெற்றிகரமாகச் சோதித்தது. மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி கடந்த 27ஆம் தேதி தொலைக்காட்சிகளில் தோன்றி பெருமிதம் தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அடுத்து நான்காவது நாடாக இந்தியா விண்வெளித்துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாக முன்னேறியிருக்கிறது என்றார்.

ஆனால் டிஆர்டிஓ அறிவிக்க வேண்டியதை மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆதாயத்துக்காக மோடி அறிவித்திருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். மோடியின் அறிவிப்பு குறித்து, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இதுகுறித்து முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டதா? அப்படியானால் தேர்தல் ஆணையம் மோடியின் அறிவிப்புக்கு அனுமதி வழங்கியதா? என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து பிரதமரின் தொலைக்காட்சி உரை குறித்து ஆய்வு செய்யத் தேர்தல் ஆணையம் தனிக் குழு அமைத்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தூர்தர்சனுக்கும், ஆல் இந்தியா ரேடியோவுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து தனி குழுவினர், மோடி தொலைக்காட்சிகளில் பேசியதற்கான வீடியோ ஆதாரம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

தூர்தர்ஷன் (செய்தி) இயக்குநர் ஜெனரல் மயங்க் குமார் அகர்வால், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அளித்த வீடியோவின் அடிப்படையில் இந்த செய்தி ஒளிபரப்பப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதுபோன்று தூர்தர்ஷன் மூத்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, மோடி பேசியதில் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் இல்லை. அவர் மிஷன் திட்டம் குறித்து மட்டுமே பேசியிருக்கிறார் என்று தனி குழு தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்திருக்கிறது. இந்த அறிக்கையின் நகலை சீதாராம் யெச்சூரிக்கு அனுப்பியதுடன், மிஷன் சக்தி திட்டம் குறித்து மோடி பேசியதில் எந்த விதி மீறலும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory