» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தினகரன் கட்சி வேட்பாளர்களுக்கு குக்கர் இல்லை: ஒரே சின்னம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் 26, மார்ச் 2019 3:30:18 PM (IST)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேநேரம் தினகரன் தரப்புக்கு பொதுச் சின்னம் வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி, ஓபிஎஸ் அணிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒதுக்கியதை எதிர்த்தும், வழக்கு முடியும் வரை தேர்தலில் தங்களுக்கு குக்கர் பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். மார்ச் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்தின் விரிவான பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் தலைமை நீதிபதி.இதையடுத்து நேற்று மாலை தினகரனின் அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் அவர்களுக்கு குக்கர் சின்னம் உள்ளிட்ட பொது சின்ன வழங்க வாய்ப்பில்லை என்று கூறி சுமார் 300 பக்கம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் இன்று (மார்ச் 26) காலை 10.30 க்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் விரிவான பதிலைப் படித்த தலைமை நீதிபதி, அமமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபலை நோக்கி சரமாரியான கேள்விகளைக் கேட்டார்."ஒரு குறிப்பிட்ட சின்னத்தை குறிப்பிட்ட கட்சிக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?” என்று கேட்டார் தலைமை நீதிபதி.

அப்போது வழக்கறிஞர் கபில் சிபல், "டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு நடந்துகொண்டிருந்தபோது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சின்னத்தைத் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது” என்று கபில் சிபல் சொல்ல, நீதிபதியோ, "அந்த இரட்டை இலை வழக்குதான் உயர் நீதிமன்றத்தில் முடிந்துவிட்டதே? பழைய முறைப்படி இடைக்கால சின்னத்தை எப்படி கேட்க முடியும்? அமமுகவை கட்சியாக பதிவு செய்யாத போது, பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொது சின்னத்தை எவ்வாறு கேட்க முடியும்? நீங்கள் இரட்டை இலை கேட்டு மேல்முறையீடு செய்திருக்கிறீர்கள்? குக்கர் கேட்டும் வாதாடுகிறீர்களே?” என்று உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டார்.

அதற்கு தினகரன் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், "அமமுகவை பதிவு செய்யத் தயார். இன்றைக்கே கூட பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம். அதனால் குக்கர் சின்னம் அல்லது ஏதாவது ஒரு பொது சின்னத்தை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கேட்டார். அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய வழக்கறிஞர், "கட்சியைப் பதிவு செய்தால் குறைந்தது ஒரு மாதம் கழித்துதான் பொதுச் சின்னம் தரமுடியும். அவர்கள் கட்சியை இன்றே பதிவு செய்தாலும் உடனே குக்கர் சின்னம் தர முடியாது” என்று பதில் அளித்தார். ”சுயேச்சைகளுக்கு எப்போது சின்னம் ஒதுக்குவீர்கள்?” என்று நீதிபதி கேட்க, "வேட்பு மனு தாக்கல், மனு பரிசீலனை முடிந்துதான் ஒதுக்குவோம்” என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

இந்நிலையில் டிடிவி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி முக்கிய வாதத்தை முன் வைத்தார். "நீதிமன்றம் சட்டத்தைப் பற்றி மட்டுமல்லாமல் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.அமமுக என்ற கட்சி அதிமுகவில் இருக்கும் தங்களது உரிமையை கைவிட்டுவிடக் கூடாது என்பதால்தான் பதிவு செய்யாமல் இருந்தார்கள். எனவே அவர்கள் பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதியிடம் எடுத்துச் சொன்னார். இதற்குப் பிறகுதான் தினகரன் தரப்பு மீது சரமாரியான கேள்விகளைக் கேட்ட நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியது.

"வேட்பு மனு தாக்கல் முடிந்ததும், மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான தேதி முடிந்ததும் பரிசீலனை முடிந்து ஒரே சின்னத்தை தினகரன் தரப்புக்குக் கொடுக்க முயற்சிக்கலாமே?” என்று தேர்தல் ஆணையத்தை நோக்கிக் கேட்டனர் நீதிபதிகள்."ஒருவர் எவ்வளவு வலுவானவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளமாக இருக்கும். ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னங்களை ஒதுக்கினால், அவர்களது அரசியல் வாழ்வு பாழாகிவிடும்” என்று நீதிபதிகள் சொல்ல,

"தினகரன் தரப்பு சுயேச்சையாகத்தான் போட்டியிடமுடியும் என்பதால் தனித் தனி சின்னம்தான் தர முடியுமே தவிர பொது சின்னம் தரவே முடியாது. இப்போது தினகரன் தரப்புக்கு பொது சின்னம் வழங்கினால் அது நாடு முழுதும் உள்ள பதிவு செய்யப்படாத குழுக்களுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும்” என்று மீண்டும் மறுத்தது தேர்தல் ஆணையம். 

இதற்கிடையே ஓபிஸ், ஈபிஎஸ் தரப்பு வாதத்தில், "இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சியில் ஏற்கனவே இருமுறை தினகரன் தோற்றுவிட்டார். தினகரன் தரப்பினருக்கு குக்கர் போன்ற பொதுச் சின்னத்தை வழங்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதன் பின் பகல் 11.40 மணியளவில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், "டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரத்தில் உள்ள விளக்கத்தை ஏற்று தினகரனின் கோரிக்கையை நிராகரிக்கிறோம். ஆனால் கட்சியைப் பதிவு செய்துகொள்கிறோம் என்று அவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். எனவே காலத்தைக் கருத்தில் கொண்டு வரும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தினகரன் தரப்புக்கு குக்கருக்கு பதிலாக பொதுச் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறது.

தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், "தினகரன் தரப்பிலான 59 வேட்பாளர்கள் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் கொடுத்தோம். அதையடுத்து இந்த 59 வேட்பாளர்களையும் சுயேச்சைகளாகக் கருதி, ஒரே விதமான சின்னத்தை வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது. நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் களம் அனைவருக்கும் சமம் என்பதற்காக இந்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது முன்னுதாரணமான தீர்ப்பு” என்று தீர்ப்புக்குப் பின் கூறினார்.


மக்கள் கருத்து

இவன்Mar 27, 2019 - 06:53:37 AM | Posted IP 141.1*****

ஜெயா வீட்டு வேலைக்கார குடும்பம், சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்த குடும்பத்தை பார் .. இவரை நம்பி ஒரு ஜாதி குரூப் இருக்கு ...எல்லாம் திருந்தப்போவதில்லை..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory