» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்: என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 5பேர் பலி!!

சனி 23, மார்ச் 2019 11:59:05 AM (IST)

ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அப்போது லஷ்கர்–.இ–தொய்பா கமாண்டர் உள்பட 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு–காஷ்மீரில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். பாராமுல்லா மாவட்டம் கலாந்த்ரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

விசாரணையில் கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர்–இ–தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த கமாண்டர் அலிபாய் என்றும், காஷ்மீரின் சோபோரை சேர்ந்த அமிர்ரசூல் என்றும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்–இ–முகம்மது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. இந்த மோதலில் ஒரு அதிகாரி உள்பட 3 பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோபோரில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இன்டர்நெட் மொபைல் சேவையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

இது தவிர பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்துஅப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாலை அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். முன்னதாக சிறுவன் ஆதிப் உள்பட 2 பேரை பயங்கரவாதிகள் அந்த வீட்டில் பணயக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்தனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் அந்த வீட்டில் இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

பணய கைதிகளை கேடயமாக பிடித்து வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கிடையே பணயகைதியாக இருந்து முதியவர் ஒருவர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி ஓடி வந்து விட்டார்.. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் பதுங்கி இருந்த வீட்டை பாதுகாப்பு படையினர் தகர்த்தனர். துப்பாக்கி சண்டையில் அந்த வீடு ஏற்கனவே பலத்த தேசம் அடைந்து இருந்தது. இரவு முழுவதும் நடந்த பாதுகாப்பு படையினரின் இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

பணய கைதியாக பிடித்த சிறுவன் பலி: 

பின்னர் அந்த வீட்டில் பாதுகாப்பு படையினர் சென்று சோதனை நடத்தினார்கள். இப்போது இடிபாடுகளுக்கு இடையே சிறுவன் ஆதிப் பிணமாக கிடந்தது தெரியவந்தது. கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளில் ஒருவர் லஷ்கர்–இ–தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர். அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள். 

இதற்கிடையே தெற்கு காஷ்மீர் ஷோபியன் மாவட்டம் இமாம் சாஹிப் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்துள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து அங்கு என்கவுன்டர் நடந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு என்கவுன்டர்களில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். சோபோர் மாவட்டம் வார்போரா பகுதியிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்டர் நடந்தது. இதில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் பற்றி தகவல் கிடைக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory