» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசப் பாதுகாப்பை மட்டுமே தேர்தல் பிரச்னை ஆக்குகிறது பாஜக: சசி தரூர் குற்றச்சாட்டு!!

புதன் 20, மார்ச் 2019 10:27:48 AM (IST)

தேசப் பாதுகாப்பு பிரச்னையை மட்டுமே மையமாகக் கொண்ட தேர்தலாக மாற்றுவதற்கு ஆளும் பாஜக முயன்று வருகிறது என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் சசி தரூர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை, தொடக்கத்தில் காங்கிரஸுக்கு சாதகமான சூழலே நிலவி வந்தது. எனினும், புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தத் தேர்தலை தேசப் பாதுகாப்பு பிரச்னையை மட்டுமே மையமாகக் கொண்ட தேர்தலாக மாற்றுவதற்கு ஆளும் பாஜக முயன்று வருகிறது.

இந்தியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதைப் போலவும், அந்த ஆபத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்க தங்களால் மட்டுமே முடியும் என்பது போலவும் மாயையை ஏற்படுத்த பாஜக கடுமையாக முயல்கிறது. காங்கிரஸ் கட்சியையும், என்னையும் பொருத்தவரை தேசப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான பிரச்னைதான். ஆனால், அது ஒன்றை மட்டுமே வைத்து தேர்தலை நடத்த முடியாது. இப்படிச் சொல்வதின் மூலம் தேசப் பாதுகாப்புக்கான முக்கியத்துவத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மக்களவைத் தேர்தல் என்பது, தொடர்ந்து நீடித்து வரும் அனைத்து முக்கியப் பிரச்னைகளையும் மையமாகக் கொண்டு நடத்தப்பட வேண்டும் என்பதே என் கருத்தாகும்.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சம்பவம் சரியாக எதிர்கொள்ளப்பட்டது; இனியும் எதிர்கொள்ளப்படும்; அவ்வாறு எதிர்கொள்வது அவசியமானதும் கூட.அதே போல், கோடிக்கணக்கான நமது மக்களை அன்றாடம் தாக்கும் பசி, வறுமை, பிணி போன்ற பயங்கரவாதங்களையும் எதிர்கொள்வது மத்திய அரசின் கடைமையாகும்.புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது சரியாக இருந்தாலும், மக்களுக்கு உண்மையான பிரச்னைகளை நினைவுபடுத்துவது காங்கிரஸ் கட்சியின் கடமையாகும்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் இதுவரை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 97 சதவீதம், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது காங்கிரஸ் கட்சியின் புள்ளிவிவரமல்லை; மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கே இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை அளிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியன் மூலம், அனைத்து மதத்தினரும் பாரபட்சமின்றி சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் அடித்தளத்தையே பிரதமர் நரேந்திர மோடி அசைத்திருக்கிறார்.

இந்தியாவில் பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களைவிட, வறுமையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கைதான் அதிகம். வரலாற்றிலேயே முதல் முறையாக கேளராவில் 8 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகளிலும் இருந்தும் நாட்டை பாதுகாக்க வேண்டும்.இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில், மத்திய ஆட்சி பீடத்தில் தங்களது வேலைவாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதில்தான் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

எனினும், பாஜகவை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்று சசி தரூர் நம்பிக்கை தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைகளில் இணையமைச்சராக பொறுப்பு வகித்த சசி தரூர், திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 2 முறை பேட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது அதே தொகுதியில் அவர் 3-ஆவது முறையாகப் போட்டியிடுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory