» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சோனி எரிக்சன் நிறுவன வழக்கு: அனில் அம்பானியை காப்பாற்றிய முகேஷ் அம்பானி

செவ்வாய் 19, மார்ச் 2019 5:11:01 PM (IST)

சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி செலுத்த வேண்டிய ரூ.468 கோடி நிலுவைத் தொகையை, அவரது சகோதரர் முகேஷ் அம்பானிதான் செலுத்தி அனில் அம்பானி சிறை செல்வதிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

முகேஷ் அம்பானி ஆசியாவின் பெரும் பணக்காரராகவும், அவரது சகோதரர் அனில் அம்பானி இந்திய அளவில் பெரும் பணக்காரராகவும் உள்ளனர். இவர்களது தந்தை திருபாய் அம்பானி மறைந்தபிறகு, 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அம்பானி சகோதரர்கள் சொத்துகளைப் பிரித்துக்கொண்டு தனியாகப் பிரிந்தனர். சமீப ஆண்டுகளில் அனில் அம்பானி கடும் கடன் சுமையில் சிக்கினார். அதற்கு மாறாக முகேஷ் அம்பானி ஆசிய அளவில் பெரும் பணக்காரராக வளர்ந்தார்.

இந்நிலையில் சோனி எரிக்சன் நிறுவனம் தனக்கு செலுத்த வேண்டிய ரூ.468 கோடி நிலுவைத் தொகையை அனில் அம்பானி அளிக்கவில்லை என்று கடந்த ஆண்டில் வழக்கு தொடர்ந்தது. அனில் அம்பானி டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்த அக்டோபர் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது. ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாததால் அனில் அம்பானி மீது சோனி எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து அனில் அம்பானியைக் கண்டித்த உச்ச நீதிமன்றம் நிலுவைத் தொகையை மார்ச் 19ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. இன்றோடு காலக்கெடு முடியும் நிலையில் நேற்று நிலுவைத் தொகையை செலுத்தி அனில் அம்பானி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்நிலையில் கடனில் சிக்கியுள்ள தனது சகோதரரை மீட்கும் விதமாக முகேஷ் அம்பானியே நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை அனில் அம்பானியும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனில் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த கடுமையான நேரத்தில் என்னுடன் நின்றதற்கு, என் மரியாதைக்குரிய அண்ணன் முகேஷ், நீடா அவர்களுக்கு எனது உண்மையான மற்றும் இதயப்பூர்வமான நன்றி. இந்த உன்னதமான ஆதரவு நம் வலுவான குடும்ப மதிப்புகள் விரிவடைந்திருக்கிறது என்பதை விளக்குகின்றன. நானும் எனது குடும்பமும் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு பொருட்களை (ஸ்பெக்ட்ரம் மற்றும் டவர்கள் போன்ற) 2017ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி முகேஷ் அம்பானி ரூ.23,000 கோடிக்கு பெற்று அனில் அம்பானிக்கு உதவிய நிலையில் தற்போது மீண்டும் உதவியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory