» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடும்ப கட்சிகள் படுதோல்வியில் இருந்து பாடம் கற்றுள்ளதா? அருண் ஜேட்லி விமர்சனம்

ஞாயிறு 17, மார்ச் 2019 10:04:30 AM (IST)

ஒன்று தோற்றுவிட்டது, மற்றொன்று இன்னும் புறப்படவில்லை என்று காங்கிரஸ் குடும்ப அரசியல் பற்றி அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சரும், பா.ஜனதா விளம்பர குழு பொறுப்பாளருமான அருண் ஜேட்லி சமூக வலைத்தளத்தில் ‘2019 குறிப்பேடு’ என்ற தலைப்பில் கூறியிருப்பதாவது: நேரு காங்கிரசில் இருந்த பல்வேறு தேசிய தலைவர்களை புறக்கணித்துவிட்டு தனது மகள் இந்திரா காந்தியை கட்சியின் தலைவராக்கியதன் மூலம் இந்தியாவில் குடும்ப அரசியலுக்கான விதை விதைக்கப்பட்டது. அதிலிருந்து பரம்பரை, பரம்பரையாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி அந்த விருப்பமான குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கே ஒதுக்கப்படுகிறது.

ஜவகர்லால் நேருவிடம் இருந்து இந்திரா காந்தி, அவரிடமிருந்து சஞ்சய் காந்தி, அவரிடம் இருந்து ராஜீவ் காந்தி. எதிர்பாராத வகையில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஒரு குறுகிய காலத்துக்கு (நரசிம்மராவ் காலம்) காங்கிரஸ் தன்னை அந்த குடும்ப அரசியல் விலங்கில் இருந்து விடுவித்துக்கொள்ள முயற்சி செய்தது. ஆனால் அதன் பிடியிலிருந்து நீண்டகாலம் வெளியில் இருக்க முடியவில்லை. பின்னர் சோனியா காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நீண்டகாலம் பணியாற்றினார். 

அதன்பின்னர் கட்சி தலைவருக்கான செங்கோலை தனது மகன் ராகுல் காந்திக்கு வழங்கினார். கட்சி இப்போது உற்சாகம் இழந்து இருப்பதால், மற்றொரு குடும்ப உறுப்பினர் (பிரியங்கா காந்தி) அரசியலுக்கு வந்துள்ளார். முக்கிய கேள்வி என்னவென்றால், இந்த குடும்ப கட்சிகள் 2014 படுதோல்வியில் இருந்து பாடம் கற்றுள்ளதா? 2019-ல் தோல்வியை தவிர்க்க சாத்தியம் உள்ளதா? சாத்தியம் இல்லை. இந்திய மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறார்கள். இந்தியா ஒரு முடியாட்சி அல்ல. இது என்ன மன்னராட்சியா? அல்லது பரம்பரை ஜனநாயகமா? பரம்பரைவாதிகள் தகுதி, திறமை வாய்ந்த நபர்களை ஏற்றுக்கொள்வதில்லை.

தகுதியும், திறமையும் வாய்ந்த ஒரு மனிதரால் இறுதியாக இந்த கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு, பரம்பரை கதைகள் குழிதோண்டி புதைக்கப்படும்போது தான் ஜனநாயகத்தின் உண்மையான வலிமை தெரியவரும். அதுதான் இந்தியர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும். அடுத்த தலைமுறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருக்கலாம். அனைத்து வாரிசுகளுக்கும் தலைவராகும் ஆசை வரும். அப்போது பெற்றோர் பெருந்தன்மையாக வழங்குவார்கள். சமீபத்திய வரலாறு இதனை வேறுவழியில் நிரூபித்துள்ளது.

அதிகாரத்தை வாரிசுகள் பங்கிடும்போது யார் பெரிய மன்னர்? என்ற கேள்வி எழும். உத்தரபிரதேசம், பீகார், அரியானா, ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற குடும்ப அரசியல் நிலவுகிறது. ஒரு சோதனையாக கர்நாடகாவில் மகன்கள் மாநிலத்தில் பங்கேற்பதும், பேரன்கள் மத்தியில் பங்கேற்பதும் நடைபெறுகிறது. மராட்டியத்திலும் இது தொடங்கி ஆரம்பநிலையில் உள்ளது. காங்கிரஸ் சில சோதனைகளையும் செய்துள்ளது. ஒரு உரிமையாளரைவிட 2 உரிமையாளர்கள் சிறந்தது என அக்கட்சி நம்புகிறது. ஒன்று தோற்றுவிட்டது, மற்றொன்று இன்னும் புறப்படவில்லை. இவ்வாறு அருண் ஜேட்லி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory