» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கு பின்னர் தேர்தல் நடத்தினால் என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

வெள்ளி 15, மார்ச் 2019 12:10:59 PM (IST)

தமிழகத்தில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கு, தேர்தலை பின்னர் நடத்தினால் என்ன பிரச்சினை  என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்தே இத்தேர்தலை நடத்திடவேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. அதேபோன்று இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் முறையீடு செய்யப்பட்டது. திமுக சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி முறையீட்டைத் தாக்கல் செய்தார். 

அவரது முறையீட்டில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 3 தொகுதிகளை நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி ஒத்திவைப்பது சரியல்ல. 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டார். வழக்கை  தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்றது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி எஸ்.எம்.பாப்டே அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக ஆஜரான தேர்தல் ஆணையத் தரப்பில் மூன்று தொகுதிகளிலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதால் நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைக்கும்படி கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் திமுக தரப்பில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு மீண்டும் மீண்டும்  வலியுறுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் விரைந்து நடத்த எங்களை ஏன் நிர்பந்திக்கிறீர்கள்? 3 தொகுதி இடைத்தேர்தலை பின்னர் நடத்தினால் என்ன பிரச்சினை, எங்களை ஏன் நிர்பந்திக்கிறீர்கள், நாங்கள் விசாரணை நடத்த வேண்டாமா? எதிர்தரப்பு வாதத்தை கேட்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினர்.

வழக்கு விசாரணையில் வாதத்தை வைத்த தேர்தல் ஆணையத் தரப்பு 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 தொகுதி இடைத்தேர்தலை மட்டுமே நடத்த முடியும். 3 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என உறுதியாகத் தெரிவித்து வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைக்கும்படி வாதிடப்பட்டது. ஆனால் திமுக தொடர்ந்த வழக்கில் 2 வார காலத்திற்குள் உரிய பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் மார்ச் 25-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory