» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கியில் ரூ.11,400 கோடி கடன் ஏய்ப்பு விவகாரம்: நீரவ் மோடிக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை தாக்கல்

செவ்வாய் 12, மார்ச் 2019 10:41:27 AM (IST)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.11,400 கோடி கடன் ஏய்ப்பு செய்த விவகாரத்தில், தொழிலதிபர் நீரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத் துறை புதிதாக ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக ரூ.11,400 கோடி வரை கடன் வாங்கிய வைர வர்த்தக தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல், வழக்கு விசாரணையைத் தவிர்ப்பதற்காக, கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனர். இவர்களில், நீரவ் மோடி லண்டனுக்குத் தப்பிச் சென்று விட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தது. இந்நிலையில், நீரவ் மோடி லண்டனில் சொகுசு பங்களாவில் வசித்து வருவதாகவும், அங்கு அவர் சுதந்திரமாக நடமாடுவதாகவும் பிரிட்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில் 2 நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இதையடுத்து, நீரவ் மோடிக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை ஒன்றை, மும்பையில் உள்ள கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை தாக்கல் செய்தது. 

நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிக்கையில், இந்த வழக்கு தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்கள் கூடுதலாக இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறினர். கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை நீரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.1,873.08 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதேபோல, அவருக்குச் சொந்தமான ரூ.489.75 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory