» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிடிவாத அரசின் பணமதிப்பு நடவடிக்கையால் எந்தப் பயனும் இல்லை : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

செவ்வாய் 12, மார்ச் 2019 10:25:35 AM (IST)

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் எந்தப் பயனும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது தானே நடந்திருக்கிறது. ஆனால் பிடிவாத அரசு அந்த முரட்டுத்தனமான முடிவையே எடுத்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு அறிவித்தார். கருப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டு அழிப்பு, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுப்பது ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுக்காக ரூபாய் நோட்டு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, டெல்லியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி வாரியக் குழுவின் கூட்டத்தில், கருப்புப் பணம் ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுப்பது ஆகியவை வரவேற்கத் தக்க நடவடிக்கைதான். ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறிது காலத்துக்கு எதிர்மறையான பாதிப்பு ஏற்படும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், பெரும்பாலான கருப்புப் பணம், ரொக்கப் பணமாக இல்லை. அவை, தங்கமாகவும், வீட்டு மனை, வீடு என நிலமாகவும் உள்ளன. எனவே, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, கருப்புப் பண ஒழிப்பில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னர் உர்ஜித் படேல், பொருளாதார விவகாரங்கள் துறை செயலராக இருந்த சக்திகாந்த தாஸ், அப்போதைய நிதித் துறைச் செயலர் அஞ்சலி சிப் துகல், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்கள் ஆர்.காந்தி, எஸ்.எஸ்.முந்த்ரா ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, புழக்கத்தில் இருந்த ரூ.15.41 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.500, 1,000 நோட்டுகளில், ரூ.15.31 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் வங்கிகளுக்கு வந்து விட்டன. ரூ.10,720 கோடி மட்டுமே வரவில்லை. மொத்த தொகையில், ரூ.400 கோடி கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பது மிகப்பெரிய தொகையாக இல்லை என்றும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை பாதிப்பு ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்டிஐ) கீழ் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில், பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டு பிடித்த உத்தி. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்தப் பயனும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. ஆனால் பிடிவாத அரசு அந்த முரட்டுத்தனமான முடிவை எடுத்தது. கடைசியில் ரிசர்வ் வங்கி எச்சரித்தது தானே நடந்திருக்கிறது? எத்தனை சிறு தொழில்கள் நசிந்தன? எத்தனை பேர் வேலை இழந்தார்கள் தெரியுமா? என கேள்வி எழுப்பிய சிதம்பரம், கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்காக பிடிவாத குணம் கொண்ட இந்த  பாஜக அரசு கண்டு பிடித்த உத்தி என குற்றம்சாட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory