» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராணுவ உடை அணிந்து பாஜக எம்பிக்கள் தேர்தல் பிரச்சாரம் : சிவசேனா கண்டனம்

செவ்வாய் 12, மார்ச் 2019 8:59:46 AM (IST)

புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் பெயரைக்கூறி வாக்குக் கேட்பவர்கள் குற்றவாளிகள் என்று சிவசேனா கட்சி, பாரதிய ஜனதா கட்சியை மறைமுகமாக சாடியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இந்த தாக்குதலில் உண்மை இல்லை, ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதேசமயம், இந்த தாக்குதலையும் அரசியல் கட்சிகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இவற்றைக் கண்டித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் குறிப்பிட்டுள்ளது. அதில், ”புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் பெயரைக்கூறி வாக்குக் கேட்பவர்கள் குற்றவாளிகள், உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் மரணத்தை அரசியலாக்கியதற்கு அவர்களே பொறுப்பு. அதேபோல, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலின் உண்மை குறித்து கேள்வி எழுப்புபவர்கள், நமது வீரர்களின் துணிச்சலை அவமதிப்பதற்கு சமம்” என்று சாடினார்.

அரசியல் ரீதியாக எந்த எதிர்க்கட்சிகளையும் தேச விரோதி என்று அழைப்பதும் முறையானது அல்ல. இது கருத்து சுதந்திரத்தை மீறிய செயலாகும். தேசபக்தி என்பது எந்த ஒரு கட்சிக்கும் உரிமை இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பின் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும், அது அவர்களின் கடமை. புல்வாமா தாக்குதலுக்கு பின் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிமை கோரி ஏராளமான அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். தாக்குதலின் வெற்றி குறித்து பதாகைகளும், சுவரொட்டிகளும் ஒட்டிக்கொண்டு, அந்த தாக்குதலில் கிடைத்த வெற்றியை தங்களுக்கு கிடைத்த வெற்றி போல் பேசுகிறார்கள். ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியாகக் கருதவில்லை.

பாஜக எம்பிக்கள் பலர் ராணுவ உடை அணிந்து பிரச்சாரம் செய்கிறார்கள். டில்லியில் பாஜக எம்பி மனோஜ் திவாரி ராணுவ உடை அணிந்து பாஜகவுக்கு வாக்குக் கேட்டார். இதனால் அரசியல் லாபத்துக்காக இந்த தாக்குதலை மத்திய அரசு நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அடிப்படையில் நாம் நமது வீரர்களின் உயிரிழப்பை தடுக்க தவறிவிட்டோம். ஆனால், சிலரோ வீரர்களின் உடை அணிந்து கொண்டு அவர்களை வைத்து அரசியலுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள்” என்று சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் மக்களவை தேர்தலுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், சிவசேனா தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory