» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உ.பி.யில் பசு விவகாரத்தில் போலீஸ் அதிகாரி கொலை: 4 பேர் கைது; 87 பேர் மீது வழக்கு

செவ்வாய் 4, டிசம்பர் 2018 4:20:19 PM (IST)



உத்தரபிரதேசத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஜ்ரங் தள அமைப்பாளர் யோகேஷ் ராஜ் உட்பட 87 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர்  மாவட்டத்தில் உள்ள மஹவ் கிராமத்தின் வயல்வெளியில் பசு மற்றும் கன்றுகுட்டிகளின் உடல்கள் இறந்த நிலையில் கிடந்தன. இதைக் கண்டு பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்தவர்களும், கிராமத்தினரும் ஆத்திரமடைந்து பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர். பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது  ஒரு கும்பல், போலீசாரை நோக்கி கற்களை வீசியது. அருகில் இருந்த புறக்காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்தது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் கல்வீச்சு மேலும் அதிகரித்தது. புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதுபோல், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார். அவர் பெயர் சுமித் (20) என்று தெரிய வந்தது. சம்பவத்தை தொடர்ந்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு  அதிகரிக்கப்பட்டு உள்ளது.  2 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய உதவிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த சுபோத் குமார் சிங்கின் குடும்பத்தினருக்கு ரூபாய் 40 லட்சம் நிவாரணமும், சுமித் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுபோத் குமார் சிங்கின் கார் டிரைவர் ராம் அஸ்ரே கூறும்போது, ஆபத்தான நிலையில் இருந்த சுபோத் குமாரை மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்துச் சென்றேன். ஒரு கும்பல் திடீரென்று வழிமறித்து கற்களால் தாக்கியது. அதோடு அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் இருந்து குண்டுகளும் பறந்து வந்தன. இதனால் என் உயிரை காக்க ஒடி விட்டேன். அதன்பின் என்ன நடந்தது என்று தெரியாது. கூடுதல் போலீசாரோடு வந்து பார்த்த போது இன்ஸ்பெக்டர் இறந்திருந்தார் என கூறியுள்ளார்.

இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை கொன்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஜ்ரங் தள அமைப்பாளர் யோகேஷ் ராஜ் உட்பட 87 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.வன்முறை நடந்தது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் வன்முறை தொடர்பாக 2 வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 27  பேர்களின் பெயர் இடம் பெற்று உள்ளது. பெயரிடப்படாத மக்கள் என எஃப்.ஐ.ஆரில்  60 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory