» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அமைச்சர் மீதான சி.பி.ஐ. ஊழல் புகார் கிரைம் த்ரில்லர் போல உள்ளது: ராகுல் விமர்சனம்

புதன் 21, நவம்பர் 2018 10:43:19 AM (IST)

மத்திய அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டவர்கள் மீது உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. உயர் அதிகாரி கூறிய ஊழல் புகார்களை, ‘கிரைம் திரில்லர்’ சினிமா படத்துடன் ஒப்பிட்டு ராகுல் விமர்சித்துள்ளார்.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது. இதை எதிர்த்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளார். இந்த வழக்கு நேற்று முன்தினம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான புகார்களை விசாரித்து வந்த சி.பி.ஐ. உயர் அதிகாரி எம்.கே. சின்கா தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர், மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு மாற்றப்பட்டதை ரத்துசெய்யக்கோரி உள்ளார். மேலும் அவர் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் வழக்கு விசாரணையில், மத்திய அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி. சவுத்ரி உள்ளிட்டோர் தலையிட முயற்சித்தனர் என குற்றம் சாட்டி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அஜித் தோவலும், கே.வி. சவுத்ரியும் உடனடியாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் மத்திய அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, தீய நோக்கம் கொண்டது என கூறி மறுத்தார்.இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. உயர் அதிகாரி தெரிவித்துள்ள ஊழல் புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டுள்ளார். அவர் சி.பி.ஐ. உயர் அதிகாரி எம்.கே. சின்காவின் ஊழல் புகாரை, ‘கிரைம் திரில்லர்’ (குற்றப்புலனாய்வு) சினிமா படத்துக்கு ஒப்பிட்டுள்ளார்.

அதில் அவர், "சவுதிகார் இஸ் தீப் (காவலாளியே திருடர்) என்னும் கிரைம் திரில்லர் படம் டெல்லியில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் புதிய அத்தியாயத்தில், சி.பி.ஐ. உயர் அதிகாரி மிக கடுமையான குற்றச்சாட்டுகளை ஒரு மத்திய அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சட்டத்துறை செயலாளர், மத்திய அமைச்சரவை செயலாளர் ஆகியோர் மீது சுமத்தி உள்ளார்” என கூறி இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் காவலாளி என கூறுவது வழக்கம். அதை ராகுல் காந்தி தொடர்ந்து கிண்டல் அடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.இதற்கு மத்தியில் ராகுல் காந்தி வரும் 28-ந்தேதி சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மிசோரம் மாநிலத்தில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். சாம்பாய் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக சாடினார்.

அப்போது அவர், "மிசோரம் மாநிலத்தில் நுழைவதற்கு இது ஒன்றுதான் வாய்ப்பு என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா கட்சியும் உணர்ந்து கொண்டுள்ளன. அவர்கள் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை என்பதை அறிந்துள்ளனர்” என கூறினார்.அந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி, பாரதீய ஜனதா கட்சியின் கூட்டாளி என விமர்சித்தார். மிசோரமின் கலாசாரத்தை அழிக்கும் முயற்சியில் பாரதீய ஜனதா கட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மிசோ தேசிய முன்னணி உதவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது வருத்தம் அளிப்பதாக அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory