» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒழுக்கநெறிகளை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் சுதந்திர தின உரை

புதன் 15, ஆகஸ்ட் 2018 9:08:21 AM (IST)

மகாத்மா காந்தியின் ஒழுக்கநெறிகளை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்தால், அதுவே நாம் பெற்ற சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு சமமாகும் என்று நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்..

நாட்டின் 72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தூர்தர்ஷன் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் 72-ஆவது சுதந்திர தின வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியருக்கும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி புனிதமான நாளாகும். நமது மூவர்ண கொடி, நாட்டின் பெருமையை பறைசாற்றுகிறது. 

சுதந்திர போராட்டத் தலைவர்கள், நமக்கு சுதந்திரத்தை மட்டும் விட்டுச் செல்லவில்லை. சமூக மேம்பாடு, கடைக்கோடி மனிதனுக்கும் அதிகாரமளித்தல், வறுமை ஒழிப்பு, சமூக-பொருளாதார சமத்துவமின்மையை ஒழித்தல் என பல்வேறு கடமைகளையும் விட்டுச் சென்றுள்ளனர். அந்தக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை தரும் நாளாக சுதந்திர தினம் விளங்குகிறது.

விவசாயிகளின் பெருமை: நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்காக விவசாயிகள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்கின்றனர். நாட்டின் உணவு பாதுகாப்பையும், குழந்தைகளுக்கான சத்தான உணவையும் விவசாயிகள் உறுதி செய்கின்றனர். எனவே, விளைபொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை அளித்து, அவர்களது வருவாயை உயர்த்துவதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொள்கிறோம். 

ராணுவத்தினரின் பங்களிப்பு: நமது ராணுவ வீரர்கள், மோசமான வானிலைகளையும் பொருள்படுத்தாமல், எல்லையை காக்கின்றனர். மலைப் பகுதிகளிலும், கடலிலும் பணியாற்றி, வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து நமது பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். இதேபோல், காவல்துறையினர், துணை ராணுவப் படையினரின் பணியும் போற்றத் தக்கதாகும். பயங்கரவாதத் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு தொடங்கி வெள்ளம் சூழ்ந்த சாலைகளை கடக்க முடியாமல் தவிப்போருக்கு உதவுவதுவரை அவர்களது பணி பாராட்டப்பட வேண்டியது.

பெண்களுக்கான சுதந்திரம்: நமது சமூகத்தில் பெண்களின் பங்கு சிறப்பு வாய்ந்தது. நாட்டில் சுதந்திரத்தை பரவலாக்குவது என்பது பெண்களுக்கு சுதந்திரம் அளிப்பதையும் உள்ளடக்கியது. தாய்மார்களாக, சகோதரிகளாக, மகள்களாக பெண்களை பார்க்கிறோம். குடும்பங்களிலும், பணியிடங்களிலும், உயர்க் கல்வி நிறுவனங்களிலும் பெண்களால் சிறந்த செயல்பாட்டாளர்களாக விளங்க முடியும். ஆனால், எந்த துறையை தேர்வு செய்வது என்பது அவர்களது உரிமை. அவர்களுக்கு உரிய வாய்ப்பு, பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சர்ச்சைகளைத் தவிர்ப்போம்: வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சார வசதி, திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிப்பு என்பன போன்ற இலக்குகள், நீண்ட காலமாக எட்டப்படாமல் உள்ளன. அந்த இலக்குகளை நிறைவேற்ற வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். இதுபோன்ற தருணத்தில், சர்ச்சைகளும் தேவையற்ற விவாதங்களும் நம்மை திசை திருப்புவதை அனுமதிக்கக் கூடாது.இன்று நாம் கட்டமைக்கும் அடித்தளம், முன்னெடுக்கும் திட்டங்கள், செய்யப்படும் முதலீடுகளே நமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். நமது நாடு அடைந்து வரும் மாற்றங்களும் வளர்ச்சிகளும் பாராட்டுக்குரியதாகவும், திருப்திகரமாகவும் இருக்கின்றன.

காந்திக்கு புகழாரம்: இன்னும் சில தினங்களில் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறோம். அவர் நமது சுதந்திர போராட்டத்துக்கு மட்டும் தலைமை தாங்கவில்லை. ஒழுக்க நெறிகளுக்கும் முன்னோடியாக இருந்தார். மனித குலத்துக்கே அடையாளமாக திகழும் அவர், வன்முறையை விட அஹிம்சைக்கே சக்தி அதிகம் என்பதை நிலைநாட்டியவர். ஏழைகள், சமூகத்தில் அடித்தட்டில் உள்ளவர்கள் கண்ணியமான வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக போராடியவர். அவரது ஒழுக்கநெறிகளை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்தால், அதுவே நாம் பெற்ற சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு சமமாகும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory