» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசு இல்லத்தில் சேதம் ஏற்பட்டிருப்பது பாஜகவின் சதி: அகிலேஷ் குற்றச்சாட்டு

வியாழன் 14, ஜூன் 2018 8:49:17 AM (IST)

அரசு இல்லத்தில் சேதம் ஏற்பட்டிருப்பது  இது பாஜகவின் சதி அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். அரசு இல்லத்தை தாம் காலி செய்த பிறகு, அதை ஊடகங்களுக்கு காண்பிக்கும் முன்னால், இரண்டு அரசு உயர் அதிகாரிகள் வந்து சென்றது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் காலி செய்த அகிலேஷ் யாதவ் தங்கியிருந்த இல்லத்தில் சேதம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்துமாறு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, ஆளுநர் ராம் நாயக் கடிதம் எழுதியுள்ள நிலையில், அகிலேஷ் யாதவ் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பதவியில் இல்லாத போதிலும், அரசு இல்லங்களில் தங்கியிருந்த முன்னாள் முதல்வர்கள் அந்த வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, அரசு இல்லங்களில் தங்கியிருந்த முன்னாள் முதல்வர்களான என்.டி.திவாரி, முலாயம் சிங் யாதவ், கல்யாண் சிங், மாயாவதி, ராஜ்நாத் சிங் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதில், என்.டி.திவாரி தவிர்த்து அனைவரும் அரசு இல்லங்களை காலி செய்துவிட்டனர். அதே சமயம், அகிலேஷ் யாதவ் காலி செய்த வீட்டில் சுவர் மற்றும் நடைபாதைகள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக விடியோ மற்றும் புகைப்பட பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில், சேத விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரப் பிரதேச அரசை ஆளுநர் அறிவுறுத்தினார். ஆனால், இது பாஜகவின் சதி என்பது அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டு. இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: முதல்வரின் சிறப்பு அதிகாரி அபிஷேக் கெளசிக் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி மிருதுஞ்சய் நரைன் ஆகிய இருவரும், எனது இல்லத்தை ஊடகங்களுக்கு காட்டுவதற்கு முன்பாக அங்கு சென்றது ஏன்? 

அரசு இல்லம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டபோது எப்படி இருந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்த்து நான் எதை எடுத்துச் சென்றேன் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கைக்காக காத்திருக்கிறேன். கோரக்பூர், புல்பூர், கைரானா, நூர்பூர் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் துவண்டு போய் உள்ள பாஜகவின் சதி இது. காணாமல் போன பொருள்கள் குறித்து நிரூபிக்கப்பட்டால், அவற்றை திருப்பி அளிக்க நான் தயாராக இருக்கிறேன். இந்த இல்லத்துக்காக ரூ.42 கோடி செலவிடப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். சிலர் அங்கே நீச்சல் குளம் இருந்ததாகக் கூறுகிறார்கள். நான் அங்கு வருகிறேன், அந்த நீச்சல் குளத்தை காட்டுங்கள். ஆளுநர் ராம் நாயக் நல்ல மனிதர் தான். ஆனால், அரசமைப்புச் சட்டத்தை அவர் கடைப்பிடிப்பதில்லை. அவரது மனதில் அரசமைப்புச் சட்டம் குடியிருக்கவில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கம்தான் இருக்கிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory