» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத பிடிஆணை: மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதன் 13, ஜூன் 2018 11:45:33 AM (IST)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத பிடிஆணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் 12,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை கடந்த மாதம் தாக்கல் செய்தது. அதில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் நீரவ் மோடி, அவரது தந்தை தீபக் மோடி, சகோதரி பூர்வி மேத்தா, சகோதரர் நிஷால் மோடி, மற்றொரு உறவினர் மயங்க் மேத்தா உள்பட 23 பேருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத பிடிஆணையை பிறப்பிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் கோரப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, அமலாக்கத் துறையின் கோரிக்கையை கவனத்தில் கொண்ட நீதிபதி சல்மான் அஜ்மி, நீரவ் மோடி, அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 10 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத பிடிஆணையை பிறப்பித்தார். முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் முன்னரே நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பிவிட்டனர். தற்போது நீரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளது. அவர், அந்நாட்டு அரசிடம் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory