» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுயநல அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் காவிரி பிரச்சனை தீரவில்லை: பிரகாஷ் ராஜ் ட்வீட்

திங்கள் 16, ஏப்ரல் 2018 12:18:16 PM (IST)

ஓட்டுக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளின் சூழ்ச்சியால் காவிரி பிரச்சனைக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து குற்றம்சாட்டியுள்ளார். 

காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீரில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது. ஒரே தேசத்துக்குள் இருக்கின்ற சகோதர மாநிலங்களால் தண்ணீரை சுமூகமாக பகிர்ந்துகொண்டு நட்போடு இருக்க முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதற்கு ஓட்டு அரசியல் இன்றி வேறு காரணங்கள் இல்லை.

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையில் அரசாங்கங்கள் கண்ணாமூச்சி ஆடுவது மக்களை ஏமாற்றும் செயல். ஓட்டுக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளின் சூழ்ச்சியை காவிரியால் கடக்கவே முடியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக மக்களைப் பிரித்து மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர்.அரசியல் தலைவர்கள் தீர்வு தேடுவதில் அக்கறை காட்டாமல் உணர்ச்சிகளைத் தூண்டி கலவரம் செய்து குழம்பிய குட்டையில் அதிகார மீன்களை பிடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் மாஃபியாக்களுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை. இனிமேலும் இந்த நதிநீர் அரசியல் தொடர்ந்தால் அது மீட்க முடியாத இழப்புகளைத் தரும் பேராபத்தில் முடியும்.கேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டிருக்காமல் தீர்வு தேடுகிற ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. காவிரி நீர் பங்கீட்டில் இருக்கும் உண்மையான பிரச்சனைகளையும், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளையும் தமிழக மற்றும் கர்நாடக மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது.

இரு தரப்பிலும் சமூக அக்கறை கொண்ட வல்லுநர்களின் துணையுடன் ஒரு ஆவணப்படம் எடுக்கும் முயற்சியை Just asking Foundation எடுக்கிறது. உண்மைகள் மக்களைச் சேர அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதிநீரைக் குடித்து, அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறல்ல. நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும்” என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமிApr 16, 2018 - 04:08:51 PM | Posted IP 162.1*****

தம்பி மட சாம்பிராணி - இப்ப பிரச்சினை - காவிரி ஆணையம் அமைக்க உத்தரவு - சுப்ரீம் கோர்ட்டு சொன்ன பிறகும் - ஏன் அமைக்க வில்லை என்பதுதான் - அதற்க்கு மட்டும் பதில் சொன்னால் போதும் -

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory