» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 18% ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்: ராகுல் காந்தி உறுதி

ஞாயிறு 12, நவம்பர் 2017 10:15:45 AM (IST)

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஒரே மாதிரியான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
 
குஜராத் மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தலைநகர் காந்திநகரிலுள்ள அக்ஷர்தாம் சுவாமி நாராயணர் கோயிலில் சனிக்கிழமை வழிபாடு நடத்தினார். அதைத் தொடர்ந்து, வடக்கு குஜராத் பகுதிகளில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். 

இந்த நிலையில், வடக்கு மாவட்டமான சாபர்காண்டாவின் பிராந்திஜ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று நாங்கள் (காங்கிரஸ்) மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தோம். குஜராத் மாநில சிறு வியாபாரிகளும் அதையே வலியுறுத்தினர். அதையடுத்து, ஏராளமான பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை 18 சதவீதமாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறைத்துள்ளார். ஜிஎஸ்டி-யில் ஐந்து விதமான வரி விகிதங்கள் இருக்கும் வரை அதை "கப்பார் சிங் (ஹிந்தி திரைப்பட வில்லன் பாத்திரம்) வரி என்றுதான் அழைக்க முடியும். எல்லா பொருள்கள் மற்றும் சேவைகளுக்கும் 18 சதவீதம் என்ற ஒரே வரி விகிதம் இருந்தால்தான் அதை "ஜிஎஸ்டி என்று அழைக்க முடியும்.
 
அந்த வகையில், ஜிஎஸ்டி-யை மத்திய அரசு 18 சதவீதம் என்ற ஒற்றை விகித வரியாக மாற்றும் வரை ஓயமாட்டோம். வரும் 2019-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், 18 சதவீதம் என்ற ஒற்றை விகித வரி விதிப்பாக ஜிஎஸ்டி-யில் மாற்றம் செய்வோம். தற்போது மத்திய அரசு அமல் படுத்தியுள்ள ஜிஎஸ்டி-யால் குஜராத் மாநிலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமித் ஷா மகன் விவகாரம்: பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா-வினுடைய நிறுவனத்தின் வர்த்தகம், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த ஒரு சில மாதங்களில் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மெüனம் காத்து வருகிறார். இதன்மூலம், இந்தியக் கருவூலத்தின் காவலாளியாக இருக்கப்போவதாக வாக்குறுதியளித்துள்ள பிரதமர், கருவூலக் கொள்ளையர்களின் கூட்டாளியாக செயல்படுகிறாரோ? என்று மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஹிமாசலப் பிரதேசத்துடன் ஒப்பிடும்போது குஜராத்தின் வளர்ச்சி பின்தங்கியே உள்ளது. ஹிமாசலப் பிரதேசத்தில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால், குஜராத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை. மேலும், ஹிமாசலப் பிரதேசத்தில் ஒரு அரசுப் பள்ளி கூட மூடப்படாத நிலையில், குஜராத் மாநிலத்தில் 13,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன என்றார். முன்னதாக, சாபர்காண்டா மாவட்டத்தின் ஹிம்மத்நகரில் ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


மக்கள் கருத்து

உண்மைNov 15, 2017 - 02:15:47 PM | Posted IP 122.1*****

முதல்ல குஜராத்-ல 30 சீட் ஜெயிக்க வக்கு இருக்கா பாருடா!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory